Breaking
Sun. Jan 12th, 2025

சிரேஷ்ட அறிவிப்பாளரும் சிம்மக்குரலோனுமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மறைவு, ஊடக உலகில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.

ஜிப்ரியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட்பதியுதீன் தெரிவித்துள்ளதாவது;

மரணத்தின் விதிக்கு உட்படாத ஆத்மாக்கள் எதுவும் உலகில் பிறப்பதில்லை. இறைவனின் இந்த விதிக்கு இலக்காகி இன்று ஜிப்ரி அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார். எமது கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட அவர், பன்முக ஆளுமைகளை வெளிக்காட்டி பலரையும் கவர்ந்திருந்தார்.
உன்னத ஊடகவியலாளராகச் செயற்பட்டது மட்டுமன்றி பல ஊடகவியலாளர்களையும் உருவாக்கிய பெருந்தகை மர்ஹும் ஜிப்ரி. ஆசிரியராகவும், அதிபராகவும் நீண்டகாலம் பணி புரிந்து கல்வி உலகுக்கு பாரிய பங்களிப்பை அவர் நல்கினார்.

வானொலித்துறையில் வரலாற்றுத் தடம்பதித்துள்ள மர்ஹும் ஜிப்ரியின் சாந்தமான சுபாவங்கள், நிச்சயம் அவரைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். அவருக்கு அவ்வுன்னத இடம் கிடைக்க வேண்டுமென்பதே எமது பிரார்த்தனையுமாகும்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் அல்லாஹுத்தஆலா பொறுமையையும், “கழாகத்ரை”பொருந்திக் கொள்ளும் பக்குவத்தையும் கொடுக்க வேண்டுமெனப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post