ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் , இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மார்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹொலன்டே, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடே, இத்தாலியப் பிரதமர் மற்ரோ ரென்சி, ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வு, “ஆசியாவின் உறுதிப்பாடும் செழிப்பும்” என்ற தலைப்பில் இன்று காலை இடம்பெறவுள்ளது.
ஜி7 நாடுகளின் தலைவர்கள் வெளியகப் பங்காளர்களுடன் நடத்தவுள்ள இந்தப் பேச்சுக்களில், இலங்கை , பங்களாதேஸ், வியட்னாம், இந்தோனேசியா, சாட், பபுவா நியூகினியா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கு கொள்ளவுள்ளார்.
இதன்போது, முதலில் முன்னெடுக்கப்பட்ட 100 நாள் திட்டம், அடுத்து ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்திய நடந்த நாடாளுமன்றத் தேர்தல், நீதித்துறை சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குறித்து ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
இந்தப் பேச்சுக்களில் பங்கேற்க, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, பெருந்தோட்டத்தொழில்துறை அமைச்சர் நவீன் திசநாயக்க ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றும் ஜப்பான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.