ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். ஜப்பானில் இடம்பெறும் ஜீ –7 நாடுகளின் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி ஜப்பான் செல்கிறார். இதன்போது அம்மாநாட்டில் ஜீ–7 அங்கத்துவ நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இம்மாநாடு 26 மற்றும் 27 இரண்டு தினங்கள் ஜப்பானில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட பிரதிநிதி இலங்கை வந்ததோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதோடு ஜப்பானிய பிரதமரின் விசேட செய்தியையும் கையளித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தால் இலங்கையில் வெளிநாடுகளின் முதலீடுகள் அதிகரிப்பதோடு அபிவிருத்திகளுக்கு பெருமளவு நிதி கிடைப்பது மட்டுமின்றி எமது நாட்டவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜீ – 7 பொருளாதார மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. உலகில் பலம்பொருந்திய பொருளாதார அபிவிருத்திகண்ட நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொள்வது விசேடத்துவமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
வரலாற்றில் முதன் முறையாக ஜீ – 7 நாடுகளின் பொருளாதார மாநாட்டிற்கு இலங்கைத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். தெற்காசியாவில் இந்தியாவுக்கும் இம் மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. மாறாக இலங்கை, பங்களாதேஷ் நாட்டுத் தலைவர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.