ஜெனீவாவில் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த மற்றொரு பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாள் இராஜாங்க விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை கொழும்பு வரவுள்ள தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் இது தொடர்பாகவும் ஆராய்வார் எனவும் தெரியவந்திருக்கின்றது.
2013, 2014 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளின் அடுத்த கட்டமாகவே இந்தப் பிரேரணை அமைந்திருக்கும் எனவும், உள்நாட்டுப் பிரச்சினை மீண்டும் உருவாகாமல் இருப்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும் தெரிய வந்திருக்கின்றது.
அதனை வலியுறுத்தும் வகையிலேயே புதிய பிரேரணை அமைந்திருக்கும். நாளை இலங்கை வரும் நிஷா பிஸ்வால் இது தொடர்பான பணிகளைத் இறுதிப்படுத்துவார் எனவும், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கை வரும் அமெரிக்காவின் உயர் மட்டத் தலைவரான இவர் கொழும்பில் தங்கியிருக்கும் போது அரசாங்க உயர்மட்டப் பிரமுகர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாக கொழும்பில் ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்திய பின்னர் அவர் வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார். நாளை மறுதினம் 3 ஆம் திகதி அவர் பிரித்தானியா செல்வார்.