இந்தியா-விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க.வின் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிதம்பரம் நகரப்பகுதியை சேர்ந்த கருணாகரன் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள்தான் பலியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
நேற்று (11) விருத்தாச்சலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று உரையாற்றினார்.
மிகப்பெரிய மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகலில் நடத்தப்பட்டது. அப்போது பெண்கள் கூடியிருந்த பகுதியில், ஆண்கள் கூட்டம் உள்நுழைந்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண்கள் உள்ளிட்டோர் மயக்கமடைந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் ஜெயலலிதா உரையாற்றி கொண்டிருந்த காரணத்தால், அப்பகுதிக்கு மருத்துவ உதவிப் பணியாளர்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டதாகவும், அப்போது மயக்க நிலையில் கீழே விழுந்திருந்த பெண்கள் உள்ளிட்ட 19 பேரும், கடும் வெயிலில் தரையிலேயே போடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
கூட்டம் முடிந்து ஜெயலலிதா அந்த மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகே அந்த பெண்கள் உள்ளிட்ட 19 பேரும் சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இந்த 19 பேரில், பலியாகியுள்ள கருணாகரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அப்போது ஆபத்தான நிலையில் இருந்த காரணத்தால், கூடுதல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
மற்ற 17 பேருக்கும் தீவிர மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.