அல்பேனியா நாட்டை சேர்ந்தவர் எடுயர்ட். இவரது மனைவி பிரான்கா. இவர்கள் கடந்த 2014–ம் ஆண்டில் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் ரைன்–வெஸ்ட்பாலியா என்ற மகாணத்தில் உள்ள சயுயர்லேண்ட் என்ற நகரில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரான்காவுக்கு அங்கு வந்து தங்கிய 11 நாட்களுக்கு பிறகு எடேனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அக்குழந்தைக்கு 1½ வயதாகிறது.
இந்த நிலையில், அக்குழந்தை ஒருவார காலத்திற்குள் ஜெர்மனியில் இருந்து வெளியேறி அதன் தாய் நாடான அல்பேனியாவுக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான கடிதத்தை குடியமர்வு துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
அதில், “கடந்த 2015–ம் ஆண்டு அல்பேனியா எந்த அச்சுறுத்தலும் இல்லாத பாதுகாப்பான நாடு என ஜெர்மனி அறிவித்தது. எனவே அந்த நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு தஞ்சம் கேட்டு வருபவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே புகலிடம் குறித்து பரிசீலிக்கப்படும்.
ஆனால், அல்பேனியாவில் ஒருநாள் கூட வசிக்காத அந்த குழந்தைக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இருக்க வாய்ப்பில்லை. எனவே எடோனா என பெயரிடப்பட்ட அந்த குழந்தை நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மீறினால் அக்குழந்தை நாடு கடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி அரசின் இந்த உத்தரவு பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.