ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரை நோக்கி சென்ற ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பெலோன் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 144 பயணிகள் உள்ளிட்ட 150 பேரும் பலியாகினர். துணை விமானி லுபிட்ஸ் விமானத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு மலையில் மோதியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் ஜெர்மன் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், விபத்து நடந்த அதே நாளில் துணை விமானி லுபிட்ஸ் ஜெர்மனியின் டியூஸெல்டார்ப் நகரில் இருந்து பார்சிலோனா நகருக்கு தான் இயக்கிய விமானத்தை எந்தவித தொழில்நுட்ப காரணங்களும் இல்லாமல் நீண்ட நேரம் தாழ்வாக பறக்கவைத்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக கவனமாக திட்டமிட்டே இந்த விபத்தை அவர் நிகழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் நீண்ட நாட்களாக தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததும், அவரது கணினியில் தற்கொலை செய்து கொள்வதற்கான வழிகளைப் பற்றி தேடியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.