– பரீல் –
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அங்கீகாரம் பெற்றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்படைவாத குழு என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து வெளியிட்டுள்ளமைக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
‘தப்லீக் ஜமாஅத்’ மக்களிடையே நற்பண்புகளையும் சகோதரத்துவத்தையுமே போதித்து வருகிறது. மக்களை நல்வழிப்படுத்துவதேயன்றி அடிப்படைவாதத்தைப் போதிக்கவில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் உலமா சபை ‘தப்லீக் நிகாயா’ என்றோர் பிரிவை உருவாக்கியுள்ளதாகவும் இப்பிரிவு நகரப் பகுதியில் காணிகளை கையகப்படுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் இப்பிரிவு அடிப்படைவாத செயற்பாடுகளைக் கொண்டுள்ளது என்ற கருத்துப்படவும் பேசியிருந்தார்.
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் கருத்து வினவுகையிலேயே அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அரபு நாடுகளிலிருந்து இந் நாட்டுக்கு கிடைக்கும் நிதியுதவியினால் வைத்தியசாலைகளும் பாலங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மற்றும் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளன. ‘தப்லீக் பிரிவு’ வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதில்லை.
மக்களை நல்வழிப்படுத்துவதற்காக இப் புனிதப் பணியில் ஈடுபடுபவர்கள் தமது சொந்தப் பணத்தையே செலவு செய்கிறார்கள்.
சவூதி அரேபியா, குவைத், கட்டார், ஈரான் போன்ற நாடுகள் முஸ்லிம்களுக்கென்று நிதியுதவிகளை வழங்குவதில்லை. நாட்டின் அபிவிருத்திக்கென்றே வழங்கி வருகின்றன. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் இவ்வாறான கருத்துக்கள் மீண்டும் இனங்களின் உறவுகளுக்கிடையில் விரிசலை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன.
உலமா சபை ஞானசார தேரரின் குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுக்கிறது. சமயக் கோட்பாடுகளை முன்னிறுத்தி மக்களை நல்வழிப்படுத்தும் செயற்றிட்டங்களை ஒரு போதும் அடிப்படைவாதம் என முத்திரை குத்த முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.