நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்னத்தை நேரில் சந்தித்து தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் விடிவெள்ளிக்கு கருத்து வெளியிடுகையில்,
ஞானசார தேரர் கடந்த பல வருடங்களாக பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார். ஊடகவியலாளர் மாநாட்டில் புகுந்து பௌத்த பிக்குவை அச்சுறுத்தினார்.
பின்னர் அமைச்சரை அச்சுறுத்தினார்.
இப்போது நீதிபதியை அச்சுறுத்தியிருக்கிறார். நீதித்துறையை அவமதிக்கும் வகையில் தொடராக பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இது தொடர்பில் இந்த நாட்டின் அதிகாரம் வாய்ந்த சட்ட நிறுவனம் என்ற வகையில் சட்டத்தரணிகள் சங்கம் விசேட அவதானம் செலுத்த வேண்டும். மட்டுமன்றி இதனைக் கண்டித்து உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிடுவதுடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றையும் தாக்கல் செய்ய வேண்டும்.
அத்துடன் இந்த வழக்கில் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகவும் வேண்டும். தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்தும் இவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்னத்தை நேரில் சந்தித்து வேண்டுகோள்விடுத்துள்ளேன்.
இந்த வேண்டுகோள் தொடர்பில் உடன் கவனம் செலுத்துவதாக அவர் உறுதியளித்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை எடுத்துச் செல்வது தொடர்பில் சாதகமாக ஆலோசிப்பதாகவும் அதற்குத் தேவையான சட்டத்தரணிகளை தமது அமைப்பு சார்பில் நியமிக்க முடியும் என்றும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக உபுல் ஜயசூரிய பதவி வகித்த சமயம், அளுத்கம சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சங்கத்தின் சார்பில் துணிச்சலுடன் செயற்பட்டதையும் நான் இப்போதைய தலைவர் ஜெப்ரி அழகரட்னத்திடம் சுட்டிக்காட்டினேன்.
உபுல் ஜயசூரிய சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிப்பதால் இந்த விடயத்தை அவரது கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன். அவரும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் மேலும் தெரிவித்தார்.