இனவாதம் பேசும் இனவாத கருத்துக்களை வெளியிட்டுவரும் ஞானசார தேரர் போன்றவர்களுடன் அரசாங்கம் மேற்கொள்ளும் நிர்ணயிக்கப்பட்ட சந்திப்பு செயற்றிட்டங்கள் (Engagement Process) பயனுள்ளவைகளாகத் தெரிந்தாலும் இறுதியில் தீங்கினையே (Impunity) விளைவிக்கும் என ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
நல்லிணக்கம் தொடர்பாக கடும்போக்குவாத பௌத்த தேரர்களுடன் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி மேற்கொண்டுவரும் கலந்துரையாடல்கள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கருத்துக்களையே தொடர்ந்து கூறிவருபவர். புனித குர்ஆனையும் அல்லாஹ்வையும் அவமதித்தவர்.
இவ்வாறானவர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதனால் நல்லிணக்கத்துக்கும் இன நல்லுறவுக்குமான சூழலினை உருவாக்க முடியாது. இறுதியில் அது தீங்கினையே விளைவிக்கும். முஸ்லிம்களுக்கு இதன் மூலம் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.
தீவிரவாதக் கருத்துள்ளவர்களை ஜனநாயக நீரோடைக்குள் கொண்டு வருவதென்பது சிரமமான காரியமாகும். நீதிமன்றங்களில் பல வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள் நல்லிணக்கத்துக்கும் சகவாழ்வுக்கும் ஆலோசனை கூறுபவர்களாக இருக்க முடியாது.
எனவே நல்லிணக்க முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமக்குள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும் என நாம் ஏமாந்து விடக்கூடாது.
ஆர்.ஆர். ரி. அமைப்பு பள்ளிவாசல்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு தயாராகவே உள்ளது. பள்ளிவாசல்கள் உதவி கோரினால் மாத்திரமே தேவையான உதவிகளும் ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றார்.