அளுத்கமையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்திருந்தால் நாடெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் உருவாகியிருக்கும்.
இதனாலேயே ஞானசார தேரர் கைது செய்யப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்
.
பத்தரமுல்லை,நெலும் மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
அளுத்கமயில் பொதுபலசேனா ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு தடைவிதிக்குமாறு நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தும் நீதிமன்றம் அக்கூட்டத்துக்கு தடைவிதிக்கவில்லை. கூட்டத்துக்கு தடைவிதித்தால் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்பதனாலேயே நீதிபதி ஆயிஷா ஆப்தீன் கூட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலோ அல்லது பொதுத் தேர்தலிலோ முஸ்லிம்களின் ஆதரவின்றி எவருக்கும் ஆட்சியிலமர முடியாது. முஸ்லிம்கள் ஆதரவு கட்டாயமாகத் தேவைப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நாம் முஸ்லிம்களினாலே தோற்கடிக்கப்பட்டோம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எந்தத் தரப்பென்றாலும் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம்களின் வாக்கு அத்தியவசியமாகும்.
முன்னாள் ஜனாதிபதியை தோற்கடிப்பதற்கு திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் அளுத்கம சம்பவமும் ஒன்றாகும். வெளிநாடுகளின் உளவுப்பிரிவுகளும் மஹிந்த ராஜபக் ஷவைப் பதவி கவிழ்ப்பதற்கு சதி செய்து ஒத்துழைப்பு வழங்கின. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாகவே இருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷவின் அமைச்சரவையில் பதவி வகித்த அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாடுகள் சபையில் பலஸ்தீனத்துக்கு எதிராக வாக்களித்ததனால் அவரை பதவி விலக்கினார். இவ்வாறு முஸ்லிம்களை நேசிப்பவரே மஹிந்த ராஜபக்ஷ.
அளுத்கமயில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து வன்செயல்கள் நாட்டில் ஏனைய பாகங்களுக்குப் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கினேன். ஏனென்றால் அளுத்கம சம்பவம் இடம்பெற்ற போது மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இருக்கவில்லை என்றார்.