ஞானசார தேரர் நாட்டை சீர்குழைப்பதற்கே ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்!
பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரரும் எதிர்வரும் ஏழாம் திகதி இந்நாட்டை சீர்குழைப்பதற்கும், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார். இதனை தடுக்காவிட்டால் இத் தனி மனிதன் நாட்டையும், சட்டத்தையும் கையிலெடுக்க சந்தர்ப்பமாக அமையும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்
கந்தளாயில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் திறப்பு விழாவும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (30) இடம்பெற்றது இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் . மேலும் தெரிவிக்கையில்,
எமது அமைச்சர்களும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும், கடந்த மூன்றாம் திகதி இராஜினாமா செய்த போது இந்த அரசுக்கு பல நிபந்தனைகளை விதித்தோம். முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது,மத்ரஸாக்களை பாதுகாப்பது, அப்பாவி உலமாக்களை கைது செய்யப்பட்டவர்களை விடுப்பது மற்றும் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு சட்ட அங்கிகாரம் வழங்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அன்று இராஜினாமா செய்யா விட்டால் இந்நாட்டில் பாரிய இனக்கலவரம் ஏற்பட்டிருக்கும்.
அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது .இதனால் ஞானசார தேரரின் ஊர்வலம் தடுக்கப்படல் வேண்டும். இவை தொடர்பாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும்,பாதுகாப்பு அமைச்சருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும்,இவ்விடயம் தொடர்பாக மகஜர் கையளிக்க உள்ளோம்.
இவ்விடயத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீவிரமாக இருக்கின்றோம்.இந்நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனாவே தீர்மானிக்க வேண்டும்.
முஸ்லிம் மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதோடு,எமது முஸ்லிம் பெண்களின் ஆடை விடயம் இன்று சட்ட ரீதியாக அணியலாம் என்றொரு நிலைக்கு வந்துள்ளது. அடுத்து வரும் தேர்தல் ஜனாதிபதி தேர்தலே சிறந்த தலைமைத்துவமாக நாட்டிற்கு சாபக்கேடற்ற ஒரு ஜனாதிபதியை முஸ்லிம் சமூகம் ஒன்றினைந்து கட்சி பேதமற்ற முறையில் ஒன்றினைந்து தெரிவு செய்ய வேண்டும் கோட்டபாய மஹிந்த அணி அற்ற சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடியதும் அது றிசாத் பதியுதீன் விரல் நீட்டிக் காட்டக் கூடிய நாட்டுக்கு பொறுத்தமான ஜனாதிபதியாக இருப்பார்.
இந்த மண்ணில் நிம்மதியாகவும் எமது உரிமைகளையும் பாதுகாக்கக் கூடிய ஒற்றுமையுள்ள பெரும் ஆதரவினை எதிர் வரும் தேர்தல்களில் நிரூபிப்போம் அமைச்சர் றிசாத் குற்றமற்றவர் என பல சட்ட ரீதியான பாராளுமன்ற குழுக்கள் மூலம் உறுதிப்படுத்தியும் மீண்டும் அவர் மீது அபாண்டத்தை திணிக்கிறார்கள் குற்றமுள்ளவர் என்றால் பொலிஸிலே, புலனாய்வு பிரிவிலே முறைப்பாடு செய்யுங்கள் வீண் பழி சுமத்தி அரசியல் நாடகமாடாதீர்கள்
எனவும் தெரிவித்துள்ளார்.