Breaking
Fri. Nov 15th, 2024

-சுஐப் எம் காசிம்-

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது தொடர்பிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆட்சியில் அழுத்கம, பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் அனைத்திற்கும் ஞானசார தேரரே மூல காரணமென ஆதாரங்களுடன் பொலிசாரிடம் தெரிவித்திருந்த போதும் இற்றைவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் அது கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இந்த அட்டூழியங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமெனவும், முஸ்லிம்களுக்கெதிரான இந்த வன்முறைகள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து முழுமையான விசாரணை ஒன்று  நடத்தப்பட  வேண்டுமெனவும் நாம் விடுத்த கோரிக்கை இன்னுமே நிறைவேற்றப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் உருவாகிய போது ”மத நிந்தனைக்கு எதிரான சட்ட மூலமொன்று” கொண்டுவரப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்த சட்ட மூலம் இதுவரையில் கொண்டுவரப்படவில்லை. அவ்வாறான சட்டமொன்று கொண்டுவரப்பட்டிருந்தால் மதங்களை தூஷிக்கும் இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமென்பதே எனது தாழ்மையான கருத்தாகும்.

இந்த நல்லாட்சியைக் கொண்டு வருவதில் முஸ்லிம்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் பங்களிப்பு செய்தவர்கள். உயிர்களையும், உடைமைகளையும் பொருட்படுத்தாது அவற்றைப் பணயம் வைத்து தற்போதைய அரசை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதற்கு முழுமையான பங்களிப்பு செய்தவர்கள்.

தாங்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் புனித இஸ்லாத்தையும், குர் ஆனையும்,பெருமானாரையும் கொச்சைப்படுத்தும் இனவாதிகளின் செயற்பாடுகளால் அவர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பை நல்கிவரும் அவர்களின் மனங்களை புண்படுத்துவோருக்கெதிராக முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் நல்லாட்சியின் மீதான நம்பிக்கையை அவர்கள் படிப்படியாக இழக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படக்கூடிய வாய்ப்பு உண்டென்பதை நான் மிகுந்த கவலையுடன் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் ரிஷாட் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று (01) பொலிஸ் மா அதிபரிடம் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

By

Related Post