-ஊடகப்பிரிவு-
பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அவரது வாய்ப்பேச்சுக்களை அடக்கி வைக்கவேண்டும். தற்போது முஸ்லிம்களை வீட்டுக்குள் அடைத்து விட்டு பேரினவாதிகள் சுதந்திரமான முறையில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீது தாக்குதல் நடத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) வியாழக்கிழமை மதுவரித் திருத்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது,
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எம்மை கொலை செய்தால், நாமும் கொலை செய்வோம் என கூறியுள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் தனது வாய் பேச்சுக்களை அடக்கி வாசிக்க வேண்டும். அந்த தேரரே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை மாற்றினார்.
கண்டி மாவட்டத்தில் வன்முறை இடம்பெற்றது. இது தொடர்பில் பாதுகாப்பு படை செயற்திறனற்ற வகையில் செயற்படுகின்றது. பாதுகாப்பு படை தான்தோன்றித்தனமாக செயற்படுவதன் காரணமாக, நாட்டின் சிறுபான்மை சமூகம் யார் மீது நம்பிக்கை வைப்பது? ஆரம்பகாலங்களில் சிறுபான்மை இனத்தவர்கள் பலர் பொலிஸ் உயர் பதவிகளை வகித்தனர்.
ஆனால், தற்போது அவ்வாறு ஒருவரும் இல்லை. இதற்கு இனவிகிதாசார முறையில் நியமனங்கள் வழங்கப்படாமல் இருப்பதே காரணமாகும். தமிழ், முஸ்லிம்கள் பலர் பொலிஸ் பதவிகளில் இருந்தமையினால் சட்டம் ஒழுங்கு சீராக காணப்பட்டது. ஆனால், தற்போது அவ்வாறான நிலை இல்லை.
பாதுகாப்பு துறை அலட்சியப் போக்குடன் செயற்படுவதனால் சிறுபான்மை சமூகம் யார் மீது நம்பிக்கை வைப்பது? முஸ்லிம்களை வீடுகளில் அடைத்து விட்டு பேரினவாதிகள் சுதந்திரமான முறையில் முஸ்லிம்களின் உடைமைகளின் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என்றார்.