– வி.நிரோஷினி –
ரயில்களில் பயணச்சீட்டுகள் (டிக்கெட்) இன்றிப் பயணித்தால், 3ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும். அதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பத்திரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரயில்களில் பயணஞ் செய்யும் பயணிகளின் பயணச்சீட்டுகளுக்காக, சலுகை அடிப்படையிலான கட்டணங்கள் அறவிடப்படினும், அவர்கள் அதனையும் செலுத்தத் தவறுகின்றனர்.
இன்னுஞ்சிலர், தாம் பயணிக்கும் வகுப்புகளை விடவும், கட்டணங்கள் கூடிய வகுப்புகளில் பயணஞ்செய்கின்றனர்.
பாதுகாப்பு மற்றும் வினைத்திறன் மிக்க போக்குவரத்துச் சேவையைக் கொண்டு நடத்துவதற்காக, திணைக்களத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதன் தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், டிக்கெட் இன்றி பயணித்தோரிடமிருந்து இதுவரை அறவிடப்பட்டு வந்த 1,500 ரூபாய் தண்டப்பணம் 3,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.