அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருகிற வடகொரியாவுடன் அமெரிக்கா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடன் சேர்ந்து அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளர் டொனால்டு டிரம்ப், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நான் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் பேசுவேன். அவருடன் பேசுவதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வடகொரியாவுடன் நேருக்கு நேர் பேசுவேன்” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது தொடர்பாக ஜெனீவாவில் ஐ.நா. சபைக்கான வடகொரியா தூதர் சோ சி பியாங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அவர் கிம் ஜாங் அன்னை நேருக்கு நேர் சந்திக்கும் டிரம்பின் விருப்பத்தை நிராகரித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “அவரை சந்திப்பதா, வேண்டாமா என்பது குறித்து எங்கள் தலைவர் முடிவு செய்வார். ஆனால் டிரம்பின் எண்ணம் அல்லது பேச்சு முட்டாள்தனமானது என்றே நான் கருதுகிறேன். அவர் பேசி இருப்பது ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்திக்கொள்வதற்காகத்தான். வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையிலான பிரசாரம், விளம்பரம். இது பயன்படாது. இது அர்த்தமற்றது. ஈடுபாடும் இல்லாதது” என குறிப்பிட்டார்.