டெங்கு பரவும் வகையில் சுற்றுப்புறச் சூழலை வைத்திருந்த 1113 பேருக்கு எச்சரிக்கை விடுக்கவும் மேலும் 267 பேருக்கெதிராக வழக்குத் தொடர்வதற்கும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே டெங்கு நோயின் தாக்கம் அதிகளவில் உணரப்பட்டுள்ளது. எனவே அம்மாகாணத்தில் டெங்கு நோயினை ஒழிக்கும் வேலைத்திட்டத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு ஈடுபட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் கடந்த29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.
எனவே கடந்த 29 ஆம் திகதி மாத்திரம் கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள 22140 பேருக்கு சொந்தமான குடியிருப்பு பிரதேசங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்போதே மேற்குறித்த டெங்கு பரவும் வாய்ப்புள்ள பிரதேசங்கள் இனம் காணப்பட்டுள்ளன.
ஆகவே டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுப்புறச்சூழலை வைத்திருந்த 1113 பேருக்கு எச்சரிக்கை விடுக்கவுள்ளதுடன் மேலும் 267 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும் சுகாதாரப் போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதார அமைச்சு டெங்கு பரவுவதற்கெதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளினால் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இருந்தபோதிலும் டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு அரசாங்கம் ஏராளமான நிதியினை செலவிடுகிறது.
ஆகவே குடியிருப்பாளர்கள் தமது சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு அவ்வமைச்சு மக்களை வேண்டியுள்ளது.