Breaking
Sun. Jan 12th, 2025

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறி சர்ச்சையில் சிக்கினார் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ இடையில் மதில் சுவர் கட்டவேண்டும் எனவும் யோசனை தெரிவித்தார். அந்த கருத்திற்காக அமெரிக்காவில் மட்டும் அல்ல உலக முழுவதும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில் மெக்சிகோவில் சுற்றுப்பயணம் செய்த போப் பிரான்சிஸ் வாடிகன் நகருக்கு விமானத்தில் திரும்பும்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் உள்ள குடியேறிகளை எல்லாம் வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளாரே?, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில் அமெரிக்கா-மெக்சிகோ இடையில் மதில் சுவர் கட்டவேண்டும் எனவும் யோசனை கூறுகிறாரே?, ஒரு நல்ல கத்தோலிக்க கிறிஸ்தவர் இவருக்கு வாக்களிக்கலாமா? என்று போப் பிரான்சிஸிடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த போப், ‘தன்னை ஒரு அரசியல்வாதி என்று டிரம்ப் கூறியுள்ளமைக்காக கடவுளுக்கு நன்றி. ஏனெனில், மனிதர்கள் அனைவருமே அரசியல் சிந்தனையுள்ள மிருகங்கள் (animal politicus) என தத்துவ மேதை அரிஸ்ட்டாட்டில் குறிப்பிட்டுள்ளார். நானும் ஒரு மனிதன்தான். டிரம்ப் கூறிய குடியேறிகள் தொடர்பான விவகாரத்தை உங்கள் (ஊடகம்) முடிவுக்கும் மக்களின் முடிவுக்குமே விட்டுவிடுகிறேன்.

அடுத்ததாக, இணைப்புப் பாலங்களை அமைப்பதை விடுத்து, தடுப்பு சுவர்களை கட்டுவதை மட்டுமே நினைப்பவர்கள் அவர்கள் எங்கிருந்தாலும் கிறிஸ்தவர்களே அல்ல. அவருக்கு வாக்களிக்க வேண்டுமா? கூடாதா? என்ற விவாதத்துக்குள் நான் இறங்க விரும்பவில்லை. ஆனால், அவர் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் டிரம்ப் ஒரு கிறிஸ்துவர் அல்ல என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்’ என கூறியுள்ளார்.

By

Related Post