தஃப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மினாராக்கள் இடித்து அழிக்கப்பட்டமைக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்படி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“கடந்த சில நாட்களுக்கு முன்னர், வரலாற்றுச் சிறப்பு மிக்க கூரகல, தஃப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் வளாகத்தில் அமையப்பெற்றிருந்த நுழைவாயில் மினாராக்கள், அடையாளம் தெரியாத நபர்களினால், இயந்திரம் மூலம் அகற்றப்பட்டுள்ளமையானது மிகவும் கண்டிக்கத்தக்க விடயமாகும்.
மத வழிபாட்டுத்தலங்கள் குறிப்பாக, வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இவ்வாறு இடித்து அழிக்கப்படுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன், தஃப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அழிக்க முயன்றவர்களைக் கண்டறிந்து, கைது செய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்புகின்றோம்.
இதேவேளை, தஃப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் மினாராக்கள் அகற்றப்பட்டமை தொடர்பில், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வமைப்புக்களுடன் சேர்ந்து நாமும் எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.” என்று கூறினார்.