தங்கத்தால் செய்யப்பட்ட சட்டையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய இந்தியாவின் பூனே தொழிலதிபர் தத்தா புகே, மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
பூனே அருகே உள்ள பிம்ப்ரியைச் சேர்ந்தவர் தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி சீமா, பூனே மாநகராட்சி கவுன்சிலராக கடமையாற்றிய வந்தார்.
5 கிலோகிராம் நிறையில், கழுத்து, கை மற்றும் இடுப்பில் தங்க நகைகளை அணிந்து வந்துகொண்டிருந்தார் தத்தா புகே. கடந்த 2013ஆம் ஆண்டில், 3.25 கிலோகிராம் தங்கத்தில் சட்டையொன்றை உருவாக்கி அதை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து காள்ளுமாறு நண்பர் ஒருவர், தத்தா புகேவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்நிகழ்ச்சிக்காக மகனுடன் திறந்த வெளி மைதானம் ஒன்றுக்கு தத்தா புகே சென்றார்.
அப்போது 12 பேர் அடங்கிய கும்பலொன்று, புகே மீது கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் மகன் கண்முன்பே தத்தா புகே பலியானார்.
தத்தா புகேவின் சிட்பண்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவரது நிதி நிறுவனத்தில், தொழிலதிபர்கள் பலரும் முதலீடு செய்திருந்தனர்.
வழக்கமாக பாதுகாவலர்களுடன்தான் தத்தா புகே வெளியே செல்வது வழக்கம். நள்ளிரவு பார்ட்டிக்கு செல்லும்போது அவர்களை தத்தா புகே அழைத்துச் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.