அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழான பதிவாளர் திணைக்களத்தின் ஒரு நாள் நடமாடும் சேவையை இன்று (16 ) அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
பதிவாளர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் விரைவாக பதிவு செய்பட்டு 24மணி நேரங்களில் அவற்றிற்கு உரித்தான ஆவணத்தை கையளிக்கும் புதிய திட்டத்திற்கான அங்குராபப்பண நிகழ்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம் ,ஹனீபா ,மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ் குமார் காணிப்பதிவாளர் அற்புத ராஜா , பிரதேச செயலாளர்கள் , பிரசித்த நொத்தாரிசுகள் உட்பட அரசியல் முக்கியஸ்தர்களும் இதில் பங்கேற்றனர்.
அமைச்சர் இங்கு உரையாற்றிய போது கூறியதாவது ,
தற்போது மூவின மக்களும் ஒற்றுமையாக வாழும் நல்ல சூழல் மலர்ந்து வருகின்றது.அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கும் முன்னெடுப்புகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிறுபான்மைக்கட்சிகள் ஒன்று பட்டு ஒத்துழைக்கும் தன்மையும் மக்களின் தேவைகளுக்கு செவி சாய்க்கும் நல்ல சகுனமும் தற்போது உருவாகி இருக்கின்றது.
வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் பேதங்களுக்கு அப்பால் முழு சக்தியையும் பயன்படுத்தி அரச அதிபர், ஆளுநர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இன்று அங்குரார்ப்பணம் செய்யப்படும் இந்த வேலைத்திட்டம் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் கருத்திட்டத்தில் பிரதமரின் வழி நடாத்தலில் 45இடங்களில் நடைபெறுகின்றது. பதிவாளர் திணைக்களம் 155 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த ஒன்று. எனினும் திணைக்களத்தின் செயற்பாடுகளில் பின்னடைவு காணப்பட்டதை உணர்ந்த அமைச்சர், நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் மக்களுக்கான இந்த உயரிய சேவையை பெற்றுக்கொடுக்க விழைந்தார். வெளிநாடுகளில் இத்தகைய தொழில் நுட்பங்கள் மூலம் இடம்பெறும் பணிகள் போன்று நமது மக்களும் அனுபவிக்க வேண்டுமென அவர் உணர்ந்தார்.
பொதுவாக நமது நாட்டு மக்களுக்கு காணிப்பிரச்சினை இருக்கின்றது அதே போன்று இருக்கும் காணிகளுக்கு உறுதிகளை பெற்றுக்கொள்வதிலும் பதிவுகளை மேற்கொள்வதிலும் அவர்கள் படுகின்ற பாடுகளும் அவஸ்தைகளும் எண்ணிலடங்காதவை எனவே இந்த நவீன சேவை இவற்றிக்கு எல்லாம் தீர்வு கிடைக்க வழிவகுக்கும். இந்த திட்டத்திற்கு அதிகாரிகளினதும், அரச அலுவலகர்களினதும் ஒத்துழைப்பும் உதவியும் பிரதானமானது. இவர்கள் மக்களை அரவணைக்கும் பண்புள்ளவர்களாக இருக்க வேண்டும். மொழி தெரியாத விளக்கம் குறைந்த சாதாரண குடிமகன் ஒருவன் தனது தேவை உடன் நிறைவேறவில்லை என்று சில வேளை ஆத்திரத்துடன் கதைத்தால் அவர்களை அதிகாரிகள் தட்டிக்கழிக்க கூடாது. அமைதிப்படுத்தி, ஆசுவாசப்படுத்தி முடிந்தளவில் பிரச்சினைகளை தீர்த்துக்கொடுங்கள். மிகவும் நொந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட மனோ நிலையிலும் வேதனையுடன் வாழும் இந்த மக்களுக்கு நீங்கள் மனமுவந்து உதவ வேண்டும்.
அரச அதிபர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது பிரதேச செயலகங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் அமர்ந்து அங்கு குவிந்து கிடக்கின்ற மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டு தீர்க்கும் போது அநேகமான பிரச்சினைகள் இல்லாமலாக வாய்ப்புண்டு. இவ்வாறான “அரச அதிபர் மக்கள் சேவை” ,அரச பணிகளை இலகுவாக்குவதோடு மக்களுக்கும் திருப்தியை பெற்றுக்கொடுக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
-ஊடகப்பிரிவு-