Breaking
Sun. Dec 22nd, 2024
ஏ.எச்.எம் பூமுதீன்
வடமாகாண  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள அத்தனை சதி முயற்சிகளையும் தகர்த்தெறிய இன்று(12) ஜூம்ஆவுக்குப் பின் முழு முஸ்லிம்களும் தயாராகி வருவதாக தெரியவருகின்றது.
ஜூம்ஆ தொழுகைக்கு பின் தத்தமது கையெழுத்துக்களை பதிவு செய்து வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மீள்குடியேற்ற தடைகளை தகர்த்தெறிய புறப்படுமாறு விடுத்த வேண்டுகோளை அடுத்தே இவ்வாறு முஸ்லிம்கள் ஒன்றுபட்டு தயாராகி வருகின்றனர்
ஹலால் ,ஹபாயா மற்றும் பள்ளிகளின் மீதான தாக்குதல்களின் போது முஸ்லிம் சமுகம் அடைந்த உணர்ச்சிபூர்வமான சூழ்நிலைகளை போன்று வடமாகாண முஸ்லிம்கள் தமது மீள்குடியேற்றத்தின் போது எதிர்நோக்கும் சதிகளைக் கண்டும் உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் இன்று பொங்கி எழுந்துள்ளனர்.
உள்நாட்டுக்குள்ளேயே தமது சகோதர இனம் இனவாத வெறியர்களால் அநியாயப்படுத்தப்படும் போது அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் இன்று முஸ்லிம் சமுகம் தள்ளப்பட்ட போதும் கூட அப்போதும் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றவே இன்று முஸ்லிம் சமூகம் இந்த கையெழுத்து வேட்டைக்கு இறங்கி உள்ளது.
இந்த நிலையில் தான் இன்று 02 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் பணியும் அதன் ஊடாக நாட்டின் தலைமைக்கு வடக்கு முஸ்லிம்களை மீள்குடியேற்றுமாறும் வலியுறுத்தும் செயற்பாடுமாகும்.
மகிந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பொதுபலசேனா போன்ற இனவாத வெறியர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான அத்தனை அட்டூளியங்களின் போதும் நாம் இந்த கையெழுத்து வேட்டையை பதிவு செய்து அதன் ஊடாக அந்த அட்டூளியங்களை நிறுத்துமாறு கூறும் போராட்டத்தை தவற விட்டு விட்டோம்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று நாம் இடும் ஒவ்வொரு கையொப்பமும் முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் அத்தனை அட்டூளியங்களையும் அநீதிகளையும் உடன் நிறுத்துமாறு வலியுறுத்துவதற்குமான கையொப்பம் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் வெறும் பேச்சளவிலான சமுகமன்றி செயல்ரீதியான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடியவர்கள், தமது இனத்திற்கு எதிரான அநீதிகளை தடுக்க ஒன்றுபடக்கூடியவர்கள் என்ற உண்மையை இந்நாட்டு அரசுக்கும் இனவாதிகளுக்கும் சர்வதேசத்திற்கும் தெளிவான செய்தி ஒன்றை மிகவும் அழுத்தமாக எத்திவைப்பதற்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே  இக்கையொப்பங்கள் இடும் நிகழ்வு பார்க்கப்படுகின்றது.
ஜூம்ஆ தொழுகைக்கு இருப்பதோ இன்னும் ஒரு சில மணிநேரமே. இளைஞர்களே, சகோதரர்களே,; தந்தைமார்களே இன்று எமது அத்தனை பயணங்களையும் இரத்துச் செய்துவிட்டு சாரைசாரையாக தத்தமது பள்ளிகளுக்குச் சென்று  உங்களது கையொப்பத்தை பதிவு செய்யுங்கள், அதே போன்று உங்கள் வீட்டில் இருக்கும் சகோதரிகள் தாய்மார்களும் இந்த ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கு வழியமைத்துக் கொடுப்பதுடன் ஊக்கப்படுத்துமாறும் முஸ்லிம் சமுகம் இன்று உங்களை கேட்டுக் கொள்கின்றது.

Related Post