Breaking
Mon. Dec 23rd, 2024
கட்சிகளும் சின்னங்களும் அவற்றின் நிறங்களும் மார்க்கமென நம்மவர்களில் சிலர் கருதும் போக்கு இல்லாமல் போனால்தான் நமது சமூகம் விமோசனம் பெறும். கட்சிகள் விடும் தவறுகளை தட்டிக் கேட்கும் திராணியும் நமக்கு இருக்க வேண்டும் இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளம் அக்கரவெளியில் இடம்பெயர்ந்து வாழும் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி அகதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் தேவைகளை நிறைவேற்றவே நாம் அரசியல் செய்கின்றோம். எமது கட்சியில் பயணிக்கும் அரசியல்வாதிகள் மக்களுக்கு பணியாற்றவில்லையென்றால் அவர்களால் சமூகத்துக்கு பயன் கிட்டாவிட்டால் தேர்தல்களில் அவர்களை நிராகரித்துவிடுங்கள். பெயருக்காக, புகழுக்காக கட்சி அரசியலை நாம் நடாத்த விரும்பவில்லை. இடம்பெயந்த மக்கள் படுகின்ற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்மல்ல.
அகதி முகாமிலிருந்த நான் அரசியலுக்குள் வந்த நோக்கம் மக்களின் கஷ்டங்களை போக்கவே. நான் வகித்த பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஏதோ ஓர் அசட்டுத்துணிவில் இறைவனை முன்னிறுத்தி அரசியலுக்குள் வந்தேன, நான் அரசியலில் ஈடுபடுவேன் என ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. இறைவனின் நாட்டம் இதுவாகவிருந்தது. குறுகிய காலத்தில் எமது கட்சி வளர்ந்து விருட்சமாகியுள்ளது. அரசியலில் நான் என்றுமே வீறாப்புப் பேசியதில்லை. ”சாரதியும் நானே நடத்துனரும் நானே” என்று கூறிக் கூறி நாம் மமதை அரசியல் நடத்தவும் விரும்பவுமில்லை. இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பை வடமாகாண மஜிலிஸுஷ் ஷூராத் தலைவரும் தில்லையடி முஹாஜிரின் அரபுக்கல்லூரி ஸ்தாபகப் பணிப்பளரும் அதிபருமான அஷ்ரப் முபாரக் (ரஷாதி) ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த சந்திப்பில் பங்கேற்ற அகதிமக்கள் அக்கரவெளியில் தாம் எதிர் நோக்கும் கஷ்டங்களை எடுத்துக்கூறினர். அக்கரவெளியில் சிறுவர் பூங்கா ஒன்றையும் தமது மாணவர்கள் கல்வி கற்கும் தாரக்குடிவில்லு முஸ்லிம் வித்தியாலயத்திற்கு கட்டிடம் ஒன்றையும் அமைத்து தருமாறு கோரிக்கை ஒன்றையும் விடுத்தனர். மீளக்குடியேற விரும்புவோருக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் அவர்கள் வேண்டினர்.

By

Related Post