Breaking
Mon. Nov 18th, 2024

-சுஐப் எம் காசிம்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறுகளை யாராவது தட்டிக் கேட்டால் அவர்களை துரோகிகளென பட்டம் சூட்டி கட்சியிலிருந்து வெளித்தள்ளும் துர்ப்பாக்கியம் இன்னும் தொடர்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை கந்தளாயில் மக்கள் காங்கிரஸின் காரியாலய திறப்பு விழாவின் பின்னர் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது,

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை நானும், அமீர் அலியும், நஜீப் ஏ மஜீதும் அன்று தட்டிக் கேட்ட போது எங்களைத் துரோகிகளென முத்திரை குத்தி, சேறு பூசி மக்களின் மத்தியிலே பிழையானவர்களென இனங்காட்டி வெளியேற்றினார்கள்.

சந்திரிக்கா அம்மையார் ஆட்சியமைத்த போது ஐக்கிய தேசிய கட்சியுடன் இருந்த மு காவினரான நாங்கள் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு தேவைப்பட்டிர்ந்த ஓரிரு ஆசனங்களை வழங்கி, ஆட்சியில் பங்காளியாகி முஸ்லிம் சமூக நன்மைக்காக பாடுபடுவோம் என தலைவரிடம் சுட்டிக் காட்டிய போதே எங்களை கட்சியிலிருந்து தூக்கியெறிந்தார்கள். எங்கள் சரித்திரத்தை முடித்து விட முடியுமென நம்பினார்கள்.

அமைச்சர் அதாவுல்லாவையும் பலமான அழுத்தத்தைப் பிரயோகித்து வெளியேற்றனார்கள். மு கா தவிசாளர் பஷீர் சேகு தாவூத்தும், செயலாளர் நாயகம் ஹசனலியும் ஹக்கீமுடன் இணைந்து இந்த கைங்கரியங்களை செய்து முடித்தார்கள். அதே போன்று மர்ஹூம் அஷ்ரபின் துனைவியான திருமதி பேரியல் அஷ்ரபுக்கு பல்வேறு கஷ்டங்களை கொடுத்து அவரையும் வெளியேற்றினார்கள். எங்களை வெளியேற்றுவதற்கு துனை புரிந்த பஷீரையும் ஹசனலியையும் இப்போது வெளியேற்றுவதற்கு முடிவு செய்துவிட்டார்கள்.

தலைமையை தட்டிக்கேட்டால் சமூக விரோதிகளாக, கட்சியைக் காட்டிக் கொடுத்தவர்களாக, சதி செய்பவர்களாகக் காட்டி எண்ணும் தாரக மந்திரத்தை மக்கள் மத்தியிலே காட்டி தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வது தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினதும் அதற்கு ஜால்ரா போடுபவர்களினதும் தந்திரமாக காலாகாலமாக இருந்துவருகிறது.

முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளில் அக்கறை காட்டாமல், அவற்றின் சவால்களுக்கு முகம் கொடுக்க திட்டம் தீட்டாமல் உள்வீட்டு பிரச்சினையை எப்படிச் சமாளிக்கலாம் என தடுமாறி நிற்கின்றனர். காலத்தை வீணடிக்கின்றனர்.

முஸ்லிம்களினதும் பரோபகாரிகளினதும் உதவிகளுடனும் ஒத்துழைப்புக்களுடனும் மர்ஹூம் அஷ்ரப்பின் வியர்வையினாலும், இரத்தத்தினாலும் கட்டியெழுப்பப்பட்டு இன்று தலைநகரிலே தலைநிமிர்ந்து நிற்கும் தாருஸ்ஸலாம் தொடர்பில் ஊடகங்களில் வெளி வந்து கொண்டிருக்கும் தகவல்கள் நமது சமூகத்தை கவலைகொள்ளச் செய்துள்ளது.

முஸ்லிம்களின் விடிவுக்காக முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் விமோசனத்துக்காக , சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்பதற்காக கம்பீரமான முறையில் அமைக்கப்பட்ட அந்தத் தலைமையகம் தற்போது தனிப்பட்ட சிலரின் சொத்தாக மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியில் உள்ளோரே கூறுகின்றனர்.

மர்ஹூம் அஷ்ரப் மறைவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் சம்மாந்துறையில் அதிகாலை வேளை அவர் ஆற்றிய உரை சமுதாயத்தின் மீது அந்த மகான் கொண்டிருந்த அக்கறையையும், கவலையையும் நமக்கு உணர்த்துகின்றது.

மர்ஹூம் அஷ்ரப் இந்தக் கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம் எந்தளவு தூரம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து பாருங்கள்.

வடமாகாண முஸ்லிம்கள் வாழ்வுரிமையை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் போது அதைப்பற்றி கவலை கொள்ளாமல் எந்த உதவியும் செய்யாமல் இருந்துவிட்டு, கடந்த வாரம் வன்னி சென்று அவர்களுக்காக பாடுபட்டு உழைக்கும் எங்களை மேடை போட்டு தூஷித்து வருகின்ற கேவலத்தைத்தான் நாம் பார்க்கினறோம் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில்  பிரதியமைச்சர் அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான டொக்டர் ஹில்மி மஹ்ரூப், கலாநிதி ஜமீல் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர்.unnamed unnamed (2) unnamed (1)

Related Post