ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய வாயுக்கள் ஒன்று சேர்ந்து உருவானதுதான் தண்ணீர். எனவே தண்ணீரில் ஏராளமான ஹைட்ரஜன் உள்ளது. ஹைட்ரஜன் சக்தி வாய்ந்த எரிபொருள் ஆகும். ஆனால் தண்ணீரில் இருந்து அதை பிரித்தெடுப்பது மிகவும் கடினம்.
ஆனால் தண்ணீரில் இருந்து எளிதாக ஹைட்ரஜனை உருவாக்க முடியும் என்று ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் உள்ள தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த கஸ்தூரி கிங்கோரனி உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு இது சம்மந்தமாக ஆய்வு மேற்கொண்டது. அதில் தாவரங்களில் ஒளிச்சேர்க்கை முறையை பின்பற்றி ஹைட்ரஜனை உருவாக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
தாவரங்கள் சூரிய ஒளி, தண்ணீரை பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை மூலம் புரதச்சத்துக்களை உருவாக்குகின்றன. அவை ஹைட்ரஜனை இந்த ஒளிச்சேர்க்கை மூலம் பிரித்து எடுத்து தான் இதை செய்கின்றன. அந்த தாவரங்கள் செய்வதுபோலவே ஒளிச்சேர்க்கை மூலம் இந்த விஞ்ஞானிகள் குழு புரதத்தை உருவாக்கி உள்ளது.
மேலும் பல மாற்றங்களை செய்து ஹைட்ரஜன் வாயுவை உருவாக்கிவிட முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். பெரிய கருவிகள் இல்லாமல் சாதாரண இயற்கை முறையையே முற்றிலும் இதற்கு பயன்படுத்தி ஹைட்ரஜன் உருவாக்கலாம் என்று கூறுகிறார்கள்.
இது சம்மந்தமாக கஸ்தூரி கங்கோரனி கூறும்போது, தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்கும் முதல் படிக்கு நாங்கள் சென்றுவிட்டோம். எனவே ஹைட்ரஜன் வாயுவை உருவாக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
ஹைட்ரஜன் வாயு அதிக சக்திகொண்ட எரிபொருள் மட்டுமல்லாமல் அதில் சுற்றுப்புறத்தை மாசாக்கும் கார்பன் கழிவுகளும் கிடையாது. எனவே இது மிகவும் பாதுகாப்பான எரிபொருள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.