அரிசிக்காக, ஒருமாத மின்சார மற்றும் தண்ணீர் பட்டியல் கட்டுவதற்காக உங்கள் வாக்குகளை இழந்து விடுவது தான்சார்ந்த செய்யப்படுகின்ற அரசியல் துரோகம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அஸ்ஙர் வித்தியாலயத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-
வரவிருக்கும் உள்ளுராட்சி தேர்தல் வட்டார ரீதியில் இடம்பெறவுள்ளது. அதனூடாக வட்டார ரீதியில் நல்ல தலைவர்களை நீங்கள் தேடுங்கள். உங்களிடத்தில் பசப்பு வார்த்தைகளை பேசுபவர்கள் இடத்தில் விழிப்பாக இருங்கள்.
உங்கள் பிரதேசத்தில், உங்களிடத்தில் யார் உதவி செய்வார்களோ, உங்கள் பிரச்சனை தீர்ப்பதற்கு முன்வருபவர் யாரோ அவர்களை உங்கள் பிரதேச தலைவராக இருக்க வேண்டும்.
வெறுமனமே அரிசிக்காக அல்லது ஒரு மாத மின்சார பட்டியல், தண்ணீர் பட்டியல் கட்டுவதற்காக உங்கள் வாக்குகளை இழந்து விடாதீர்கள். இது வரலாற்றிலே முஸ்லிம் பிரதேசங்களில் செய்யப்படுகின்ற அரசியல் துரோகம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வட்டாரங்களில் நல்ல தலைவர்களை தெரிவு செய்யாமல் விட்டால் உங்களை ஏமாற்றுகின்ற தலைவர்கள் தான் வருவார்கள். கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு தான் அரசியலில் ஏமாற்றப்பட்டு காணப்படுகின்றது.
நல்ல தலைவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். நீங்கள் அரசியல் ஞானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். வெறுமனே நீங்கள் நல்ல அரசியல்வாதிகளை தெரிவு செய்யாவிட்டால் உங்களுக்கு நல்ல தலைமைத்துவத்தை தரமாட்டார்கள்.
நல்ல பண்புகளையும், விழுமியங்களையும் கொண்ட தலைவர் எதிர்காலத்தில் உருவாக வேண்டுமென்றால் இவ்வாறான வேலைத் திட்;டத்தில் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு ஒரு அந்தஸ்தை கொடுக்க தவறுகின்ற போதுதான் உங்களை ஏமாற்றுகின்ற அரசியல்வாதிகள் வருகின்றார்கள்.
கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் ஒரு அரசியல் தலைவன் வெளியேறும் போது கிழக்கு மாகாணத்திலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதேசங்களில் வெடி கொழுத்தும் வரலாறு இம்முறை பார்க்கக் கூடியதாக இருந்தது.
அதிகாரம் எங்களுக்கு வழங்கி விட்டார்கள் என்று பெருமைப்படக் கூடாது. எங்களுக்கு இறைவன் தந்த அதிகாரம் மக்களுக்கு சேவை செய்வதற்காக அதனை கொண்டு மக்களின் துயரங்களை துடைப்பவர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.
கிராமிய பொருளாதார அமைச்சின் இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்களான கச்சான், சோளம், கோழிக் குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.எல்.ஏ.லத்திப் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.றமீஸா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம், ஏறாவூர் விவசாய போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.