Breaking
Mon. Dec 23rd, 2024

மத ரீதியான மோதல்களால் மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் புகலிடம் கோரி செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இவர்களுள் பெரும்பான்மையானவர்கள் மியன்மார், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் என்பது தெரியவந்துள்ளது.

மியன்மார், அரக்கான் மாநிலத்தின் ரோஹிஞ்சாவில் வங்காள மொழி பேசுகின்ற பல இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள், தமது சொந்த இடங்களை விட்டு புகலிடம் தேடி வேறு நாடுகளுக்குச் செல்கின்றனர்.அங்கு இடம்பெறுகின்ற இன மோதல்களினாலேயே இவர்கள் செல்லுமிடம் அறியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்றது. 1982ஆம் ஆண்டு ரோஹிஞ்சா மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை அடுத்து அங்கு மோதல்கள் ஆரம்பித்தன.ரோஹிஞ்சர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதால் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டன.கல்வி முதல் திருமணம் வரை உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற ​வேண்டிய நிலை ஏற்பட்டது.

மியன்மாரில் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகள், வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதோடு அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டமையால் அவர்கள் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் பயணத்திற்குப்பொருத்தமற்ற குறைந்த வசதிகளுடன் கூடிய படகுகளில் அதிகளவானவர்கள் புகலிடம் தேடி மலேசியா மற்றும் இந்தோனேஷிய உள்ளிட்ட நாடுகளை நோக்கி இடம்பெயர்கின்றனர்.

ஆனாலும் அந்த மக்களை ஏற்றுக்கொள்வதற்கு மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மறுப்புத் தெரிவிப்பதால் அவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், இந்த மக்களின் இடம்பெயர்வுக்குக் காரணம் ரோஹிஞ்சாவில் இடம்பெறுகின்ற இன மோதல்கள் அல்ல என மியன்மாரின் Rakhine மாநில முதல்வர் மௌங் மௌங் ஓன் (Maung Maung Ohn) குறிப்பிட்டுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.ஐக்கிய நாடுகளும் இவர்களை நாடற்றவர்கள் என்று அங்கீகரித்துள்ளது.

தாக்குதல், உயிர் அச்சுறுத்தல் என்பவற்றால் நாட்டை விட்டு வெளியேறி கடலில் தத்தளிக்கின்ற இந்த மக்களுக்கு தற்போதைய தேவை தனி நாடல்ல கரையேறுவதற்கு ஒரு நாடு மாத்திரமே.

Related Post