அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த போதும், இவ்வாறு விமர்சிக்கப்படும் அரசியலுக்குள் வாய்மை தவறாத நல்ல மனிதர்களும் இல்லாமல் இல்லை.
அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்துக்கு பயணமொன்றினை மேற்கொண்ட போது, மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசத்தில் நேர்மை மிக்க ஓர் இளம் அரசியல்வாதியைச் சந்திக்கக் கிடைத்தது. அவர் பெயர் ஏ.எச். சனூஸ்.
இம்முறை மன்னார் மாவட்டத்திலுள்ள மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் களமிறங்கிய சனூஸ், அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இவர், இதற்கு முந்தைய முறையும் தேர்தலில் போட்டியிட்டு பிரதேச சபை உறுப்பினரானவர்.
இம்முறை மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தேர்தலில் அ.இ.மக்கள் காங்கிரஸ் சார்பாக தமிழர், முஸ்லிம் மற்றும் கிறிஸ்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.
இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, மாந்தை மேற்கு பிரதேச சபைத் தேர்தலில் கிறிஸ்தவ சமூகத்திலிருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் வெற்றி பெறாத நிலையில், தான் வெற்றி பெற்றால், தன்னுடைய உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து, அதனை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குவேன் என, அந்தத் தேர்தலில் போட்டியிட்ட ஏ.எச். சனூஸ், தேர்தல் மேடைகளில் தானாக முன்வந்து வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த தேர்தலில் சனூஸ் வெற்றியடைந்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது. ஆனாலும், கிறிஸ்தவ சமூகத்திலிருந்து அ.இ.மக்கள் காங்கிரஸ் சார்பாக யாரும் தெரிவாகவில்லை.
எனவே, தான் வாக்குறுதியளித்தபடி, ஏ.எச்.சனூஸ் – தன்னுடைய பிரதேச சபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து, அதனை கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எஸ். பேடினன் என்பவருக்கு வழங்கியுள்ளார்.
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் மன்னார் சென்றிருந்தபோது, இவர்கள் இருவரையும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இவ்வாறான நேர்மை மிகு நபர்கள் இருக்கும் வரை, அரசியல் ஒருபோதும் சாக்கடையாகப் போவதில்லை.
இன்னொருபுறம், சனூஸ் போன்றவர்களின் இவ்வாறான நற் செயல்களால், இன நல்லுறவும் செழிப்புற்று வளரும் என்பதிலும் ஐயமில்லை.
– அஹமட் –
—நன்றி புதிது—