அத்துடன், தோட்டத் தொழிலாளர்களுக்கும் உறுதியளித்தப்படி சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பாதனியவின் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:-
தனியார்துறை ஊழியர்களின் நலன்களை பற்றியும் அரசு கவனம் செலுத்திவருகின்றது. அந்தவகையில், தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன இது விடயம் தொடர்பில் சட்டமூலத்தைத் தயாரித்துள்ளார். 2016ஆம் ஆண்டு இதை நிறைவேற்றி சட்டமாக்குவோம். இது விடயத்தில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதற்காக மன்னிப்பு கோருகின்றோம்.
அதேவேளை, தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் உறுதிமொழியளிக்கப்பட்டது. அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் தொழில் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உயர்பதவியை வகிக்கும் பாதனிய உட்பட தொழிற்சங்கவாதிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முஸ்தீபு செய்கின்றனர்.
ஆட்சிமாற்றத்தின் பின்னர் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஏனைய சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதை அவர்கள் விரும்பவில்லையா? பட்ஜட் சரியில்லை என்றால், சரியில்லை என்று நேரடியாகக் கூறவும்.
மாறாக, தொழிங்சங்க நடவடிக்கை என்ற போர்வையில் அரசியல் நடவடிக்கையில் இறங்க வேண்டாம். அரசியல் செய்ய வேண்டுமானால், கட்சியொன்றில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு கூறிவைக்க விரும்புகின்றேன்.
தரம் குறைந்த உரம் பாவனையாலேயே சிறுநீரகப் பிரச்சினை தலைதுக்கியுள்ளது என்பது உறுதியாகியுள்ள நிலையில், உரமானியத்தை மீள வழங்குமாறு வைத்தியர் பாதனிய வலியுறுத்துகிறார். மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, தரம் குறைந்த உரத்தை விநியோகிக்கவா பாதனிய செல்கிறார்?
2016ம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என அரசியலில் அநாதையாக்கப்பட்ட சிலர் கனவு காணுகின்றனர். எங்களுக்கும் விளையாட்டுகள் தெரியும் என்பதையும் கூறிக்கொள்கின்றோம்.
ரதுபஸ்வெலவில் மக்கள் தாக்கப்பட்டபோதோ, ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலோ இந்தப் பாதனிய கலந்துகொள்ளவில்லை. ஆனால், இன்று கத்துகிறார்.
தொழிற்சங்கத்தை உடைத்து துரோகமிழைத்தவர்கள், இன்று தொழிங்சங்க உரிமை பற்றி பேசுகின்றனர் என்றார்.