தமிழகம், புதுவையில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 07.00 மணிக்குத் தொடங்கி மாலை 06.00 மணிவரை இடம்பெறவுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (மே 16) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமார் 5.77 கோடி வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் 3,728 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது என தமிிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதைப் போலவே புதுச்சேரியில் உள்ள 30 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மொத்தமுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகள் தவிர மற்ற 232 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரவக்குறிச்சியில் தேர்தல் மே 23-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா. சார்பில் விஜயகாந்த், பா.ம.க.-வின் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.