துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
தமிழரசுக் கட்சியின் 15 வது மா நாட்டில் அரசாங்கம் தங்களது கோரிக்கைகளுக்கு திருப்திகரமான பதிலை தரத் தவறுமிடத்து வருகின்ற ஜனவரி மாதத்திலிருந்து சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தமிழரசுக்கட்சி அரசை எச்சரித்துள்ளது.
முஸ்லிம் கட்சிகள் சில தேர்தலைக் கண்டால் அறிக்கைகளையும்,வீர வசனங்களையும்,உறுதி மொழிகளையும் அள்ளிக் கொட்டி விட்டு தேர்தல் முடிவுற்ற பிறகு அனைத்தும் காற்றில் கரைந்த கதையென முஸ்லிம்களை நாடு வீதியில் விட்டுச் செல்வது போன்று தமிழரசுக் கட்சியின் இவ் எச்சரிக்கையை பார்க்க முடியாது.அதனுடைய தற்போதைய போக்கை வைத்துப் பார்க்கும் போது அது செய்தாலும் செய்யும்.
தமிழரசுக் கட்சி சாத்வீகப் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது?என்பதை நடாத்தும் போதே அறியக்கூடியதாக இருப்பினும்,போராட்டத்திற்கு தெரிவு செய்திருக்கும் காலம் உண்மையில் “அரசை ஆப்பிழுத்த குரங்காட்டம்” செய்வதறியாது தடுமாற வைக்குமளவு மிகப் பெரிய அழுத்தத்தை வழங்கக்கூடிய ஒரு காலப் பகுதியாகும்.
போராட்ட காலத்தை பொறுத்த வரை இரண்டு விடயங்கள் மிகப் பெரிய செல்வாக்குச் செலுத்தப் போகிறது
1.ஜனாதிபதித் தேர்தல்
2.பாப்பரசரின் இலங்கை விஜயம்
எம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்ற புது வருடமானது இலங்கை மக்களுக்கு தேர்தல் வருடமாக அமையப் போகிறது.ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி மாத ஆரம்பத்தில் நடை பெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரிய பங்காளிக் கட்சியாக உள்ள தமிழரசுக் கட்சி இக் காலப் பகுதியில் இவ்வாறான போராட்டங்கள் செய்ய விளைவது ,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடக்கும் அரசியற் பனிப் போரின் விளைவாய் தமிழ் தேசிய கூட்டமைப்பினூடாக தங்களின் தேவைக்கு நீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் வரட்சியால் சற்று சலிப்புற்று தாகித்திருக்கும் தமிழ் மக்களின் சலிப்பை இனிப்பாக்கி தாகத்திற்கு மாயை நீர் புகட்டி தங்களோடு தமிழ் மக்களை இணைத்து பயணிக்க இது வழி கோலச் செய்வது மாத்திரமின்றி இது தமிழ் மக்களின் தற்போதைய ஜனாதிபதிற்கு எதிரான போக்கு மேலும் வலுக்க வழி சமைத்துக் கொடுக்கும்..
அரசாங்கம் இதனை இரும்புக் கரம் கொண்டு அடக்கினால் மாத்திரமே இதனைத் தடுப்பது தமிழ் மக்களின் தற்போதைய மன வலிமை முன் சாத்தியமாகும்..அரசாங்கம் இதனை மிகக் கடுமையான பாணியில் கையாளவும் இயலாது.யுத்த வடுக்கள் இன்னும் தமிழ் மக்கள் மனங்களை விட்டு ஆறாமல் உள்ள பொது மேலும் மேலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி தமிழ் மக்கள் வெறுப்பை சம்பாதிப்பதும் அரசின் தொடர்ச்சியான பயணத்திற்கு அவ்வளவு உசிதமானது அல்ல.
போராட்டம் செய்ய விட்டால் மேலும் மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலம் பெற்று அரசாங்கத் தோட்டத்தினுள் வேலியைப் பிய்த்துக் கொண்டு பாய்ந்து விடும்.செழிப்பாய் இருந்த தன் தோட்டம் மக்கள் நீரின்றி வாடி வரும் நிலையில் போராட்டத்தைத் தடுத்தால் தன் தோட்டம் ஒரு போதும் தமிழ் மக்களின் நீரால் செழிக்க இயலாத அளவு கருகி வறண்டு விடும்.தன் தோட்டத்தை செழிப்புறச் செய்ய அரசு எக் கைங்கரியத்தை மேற்கொள்ளப் போகிறது?
இலங்கைக்கு பாப்பரசர் ஜனவரி மாத முற்பகுதியில் அதாவது 14ம் திகதி விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.பாப்பரசரின் இலங்கை வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்து நிற்கிறது இலங்கை அரசு.இவ்வாறான போராட்டங்கள் நடை பெறுமாக இருந்தால் பாப்பரசரின் இலங்கை விஜயம் பிற்போடப்பட,தடைப்பட அதீத வைப்புக்கள் உள்ளன.அரசின் பல நாள் தவத்தின் விளைவாய் பெற்ற பாப்பரசரின் விஜயத்தை அடைந்து கொள்ள இப் போராட்டம் தடையாக அமையப் போகிறது.மேலும்,இச் செயல் பாப்பரசரின் இலங்கை விஜயத்தை பரிகசிக்கும் ஒன்றாகவும் அமைந்து விடலாம்.
பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் பின்னணி இலங்கையில் சிறு பான்மையினருக்கு எதிராக அரங்கேற்றப் படும் செயல்களை ஆராய்தல்,கண்டித்தலாக அமையலாம் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்ற போது இவ்வாறான போராட்டங்கள் நடைபெறுவது அரசிற்கு அவ்வளவு உசிதமானது அல்ல.
எனவே,தமிழரசுக் கட்சி போராட்டம் செய்ய தேர்வு செய்திருக்கும் காலம் அரசுக்கு மிகப் பெரிய அழுத்தத்தை பிரயோகிக்கவல்லதொரு காலம்.இக் காலத்தை தவிர்த்து வேறு காலப் பகுதியில் தமிழரசுக் கட்சி போராட்டங்கள் செய்யுமாக இருந்தால் “மலையைப் பார்த்து நாய் குரைத்து மலையா இடிந்து விழப்போகிறது?”என்று அரசாங்கம் இவர்களது போராட்டங்களை கிஞ்சித்தும் கணக்கு எடுக்காது தன் பாட்டிற்கு சென்று கொண்டே இருக்கும்.
அரசியல் சாணக்கியத்தில் தன்னை வெல்ல யார் உளர்?என்றளவு தனது சாணக்கியத்தை வெளிக்காட்டி பயணித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி இவ் விடயத்தை எக் கைங்கரியத்தின்? மூலம் கையாளப் போகிறார் என்பதை காலம் கனியும் வரை பொறுமையுடன் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.