-M.S.M.ஸாகிர் –
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், நல்லிணக்கம் கொண்டு வாழ்ந்து வந்ததினை எவராலும் மறுக்கமுடியாது. அரசியல் துறையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் பலர் இணைந்து பாராளுமன்றம் சென்ற வரலாறுகள் உண்டு. இதேபோல் கல்வித்துறையிலும் மிக நெருக்கமான இடைத்தொடர்புகள் இருந்து வந்துள்ளனவென அண்மையில் சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் நடைபெற்ற “தேசிய சகவாழ்வும் இளைஞர் தலைமைத்துவமும்“ என்ற தொனிப்பொருளிலான இளைஞர் மாநாட்டில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனைத் தொகுதியின் அமைப்பாளருமான ஏ.ஆர்.எம். ஜிப்ரி குறிப்பிட்டார்.
ஸ்மாட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் றிஷ்கான் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
சுவாமி விபுலானந்த அடிகளார் கல்லடியில் சிவானந்தா வித்தியாலத்தை நிர்வகித்த காலத்தில், மட்டக்களப்பில் நிர்வாகப் பொறுப்பினை வகித்திருந்த சிவில் அதிகாரியான அறிஞர் ஏ.எம். ஏ. அஸீஸ் விபுலானந்தருடன் மிக நெருக்கமான நட்பினைக் கொண்டிருந்தார்.
அடிக்கடி கல்வி தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தி சிவானந்தாக் கல்லூரியின் பௌதிக அபிவிருத்திக்கு அஸீஸ் பேருதவி புரிந்துள்ளார். இதன் காரணமாக இப்பாடசாலையின் விடுதியில் முஸ்லிம் மாணவர்களும் தங்கிப் படிக்கும் புரிந்துணர்வு ஏற்பட்டது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல முஸ்லிம் கல்வியியலாளர்களும், அரசியல்வாதிகளும் சிவானந்தாவின் பழைய மாணவர்களாவர்.
சுவாமி விபுலானந்தா அடிகளாருடன் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் மிக நெருக்கமான கல்வித் தொடர்பைப் பேணி வந்த வேளையில், அஸீஸ் சிவில் சேவையைக் கைவிட்டு கொழும்பு ஸாஹிராக் கல்லூரிக்கு அதிபராக வந்து முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.
இதேபோல் விபுலானந்தர் கல்விகற்ற மெடிஸ்த பாடசாலையாகிய கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில்தான் கேட் முதலியார் எம்.எஸ். காரியப்பர், எம்.எம். முஸ்தபா, எம். ஏ. மஜீட், எம். சீ. அஹமது, ஏ.ஆர். மன்சூர், எம்.எச்.எம். அஷ்ரப் முதலிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் செனட்டர் மசூர் மௌலானா போன்றோர்கள் கல்வி கற்றுள்ளனர்.
இவ்வாறு அன்றைய காலகட்டத்தில் எதுவித பேதங்களுமின்றி தமிழ் – முஸ்லிம் உறவு பாடசாலை மட்டத்திலிருந்தே வலுப்பெற்றிருந்தது. இதேபோல் இனநல்லுறவு, தேசிய நல்லிணக்கம் என்பன பாடசாலைகளிலும் மாணவர்கள் – இளைஞர்கள் மத்தியிலும் இறுக்கமடையும் வண்ணம் இவ்வாறான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சகவாழ்வு, இன நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சில் அமைச்சர் மனோகணேசன் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார். தனது அமைச்சின் மூலமாக தேசிய சகவாழ்வுக்கும், இளைஞர் தலைமைத்துவ ஆளுமை விருத்திக்கும் அமைச்சர் ஆற்றிவருகின்ற பணிகளைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் மனோ கணேஷன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இம்மாநாட்டில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர். கலாநிதி எம்.எம்.எம். நாஜிம், சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ரமீஸ் அபூபக்கர், கலாநிதி எம்.ஐ.எம். ஜெஸீல், அரச வர்த்தக கூட்டுத்தான தலைவர் கலாநிதி ஏ.எம். ஜமீல் ஆகியோரும் உரையாற்றினர்.