Breaking
Sun. Nov 17th, 2024

தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தை கையாலவென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முக்கியஸ்தர்களான அமைச்சர்களான திலக் மாரப்பன, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள தனித்தனிக் கடிதத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
அப்பாவிகளான இந்த கைதிகள் சந்தர்ப்பவசத்தால் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்குண்டவர்களாக இருக்கலாம். அத்துடன் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் பயந்து சிற்சில உதவிகளையும் அவர்கள் புரிந்திருக்கலாம். எனினும் அவர்கள் பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அல்லர். புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக இவர்கள் சிறைகளிலே வாடிக்கிடக்கின்றனர். இந்த விவகாரம் மனித நேய அடிப்படையிலேயே நோக்கப்பட வேண்டும்.
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையிலும் இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். யுத்தத்தின் பாதிப்புக்களால் சீரழிந்துள்ள இந்த கைதிகளின் குடும்பங்கள், குடும்ப தலைவனின்றி, தந்தையின்றி, சகோதரர் இன்றி வறுமையின் கோரப்பிடியால் பாதிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த மக்களின் அவலங்களை நான் அறிவேன்.
கடந்த அரசாங்க காலத்தில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட பன்னிரெண்டு பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டு தற்போது நல்லமுறையில் குடும்ப வாழ்வை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இவர்களின் நிலையை கருத்திற்கொண்டு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை விடுக்கின்றேன்.

By

Related Post