முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது 116 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியுமாயின் ஏன் மீதமுள்ளவர்களை விடுதலை செய்யமுடியாது. அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை. அவர்களை சமூகமயப்படுத்த வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தை இன்னும் வைத்திருப்பதில் அர்த்தம் கிடையாது. குறித்த தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச பயங்கரவாதிகளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச் சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்தமைக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டனர். இதன்பிரகாரம் இதுவரைக்கும் 216 அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவற்றில் 52 பேருக்கு இதுவரைக்கும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் 116 பேருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பினும் அவர்களது வழக்கு விசாரணைகள் 12 வருடத்தை தாண்டியுள்ளது. ஆகவே இவர்களை இதற்கு மேலும் சிறைச்சாலைகளில் வைத்திருப்பதில் எந்தவொரு பலனும் இல்லை.
இருந்த போதிலும் அரங்கலவில் பல பிக்குகளை கொன்று குவித்த கருணா அம்மான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் அமைச்சராக செயற்பட்டார். அதேபோன்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராகவும பதவி வகித்தார்.
இதற்கு அப்பால் கே. பி என்ற குமரன் பத்மநாதன் கொழும்பில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். ஆனால், எந்தவொரு குற்றமும் அறியாத அப்பாவி இளைஞர்கள் சிறையில் தடுத்து வைக்கப்படுவதில் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. இவர்களை சமூகமயப்படுத்த வேண்டும். ஆகவே, அரசியல் கைதிகளை விடுவிப்பது ஒருபோதும் பிழையாகாது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது 116 அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட முடியுமாயின் ஏன் எமது அரசாங்கத்தினால் கைதிகளை விடுதலை செய்ய முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த ஜீ.எல்.பீரிஸ் இதனை அறியாமல் இருந்துள்ளார். இதேவேளை பயங்கரவாத தடை சட்டத்தை இதற்கு மேலும் வைத்திருப்பதில் எந்தவொவரு அர்த்தமும் கிடையாது. குறித்த தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச பயங்கரவாதிகளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது.
அதேபோன்று காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அமைப்பின் குழுவிற்கு சாட்சியமளிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.