– ஆர். ராம் –
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். சுமந்திரன் தெரிவித்தார்.
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமக்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று காலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் அவர்களின் கோரிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எடுத்துக் கூறினர்.
குறித்த கோரிக்கைகளை நீதியமைச்சர் உடனடியாக தொலைபேசி ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து குறித்த விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு பெற்றுத் தருவதாகவும் குறைந்தது 3 வாரகால அவகாசம் தேவைப்படுவதாகவும் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குவதா, பொது மன்னிப்பளிப்பதா அல்லது வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதா என்பது குறித்து ஜனாதிபதி தெரிவிக்காத போதும், அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு அளித்து முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.