Breaking
Mon. Nov 18th, 2024

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை தமிழ் அரசு கட்சி ஆதரிப்பதாக எடுத்த தீர்மானத்தை தான் பாராட்டுவதாகவும் அது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சாளம்பைக்குளத்தில் இன்று மாலை (03) சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

2௦15 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் சிறுபான்மை சமூகமான தமிழர்களும் முஸ்லிம்களும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து, அவரை வெற்றிபெறச் செய்தனர் என்றும் அதேபோன்று, இம்முறை தேர்தலிலும் சஜித் பிரேமதாசவுக்கு சிறுபான்மை மக்களின் அதிக பெரும்பாலானோர் ஆதரவளிப்பதால் அவர் வெற்றிபெறுவது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர்,

எதிரணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூட்டு சேர்ந்துள்ள இனவாதிகளை அடக்குவதற்கு, சஜித் பிரேமதாசவின் வெற்றியே வழி வகுக்கும். கோட்டாவை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்குவதில் இனவாதிகள் காட்டிய முனைப்பும் அவரை வெற்றிபெறச் செய்வதில் காட்டும் தீவிரமும் தாங்கள் இழந்துபோன அதிகாரத்தைக் கைப்பற்றுவது மாத்திரமின்றி, அதன் பின்னர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதற்காகவே.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், முஸ்லிம்களை இவர்கள் கொடுமைப்படுத்தியதற்கு முக்கிய காரணம், அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆவேசத்தை கிளப்பி, தமது வாக்கு வங்கியை அதிகரித்து, அதிகாரத்தை மீளக் கைப்பற்றுவதற்கே ஆகும்.

ஆட்சியை இழந்த பின்னர் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக நீண்ட நாட்கள் மேற்கொண்டு வந்த திட்டம், முஸ்லிம் பெயர் தாங்கிய சஹ்ரானின் பயங்கரவாத நடவடிக்கையினால் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், எந்தக் காலத்திலும் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஆதரித்தவர்கள் அல்லர். இனிவரும் காலங்களிலும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணை போகமாட்டார்கள் என்பதையும் மிகவும் தெளிவாக நாங்கள் கூறிவைக்க விரும்புகிறோம் என்று கூறினார்.

Related Post