Breaking
Tue. Jan 14th, 2025

தமிழ்ச் சமூகம் தலைமையை இழந்து, தவிப்பதைப் போன்று சகோதர முஸ்லிம் சமூகமும் வேதனை படக்கூடாதென்று, வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் த.பகீரதன் தெரிவித்தார்.

“முஸ்லிம்களாகிய நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். ஒற்றுமையாக பயணியுங்கள். வெவ்வேறு கட்சிகளுக்கு முண்டுகொடுப்பதையும், அரசுக்கு முட்டுக்கொடுப்பதையும் தயவுசெய்து கைவிடுங்கள். சிறிய சிறிய பிரச்சினைகளை பெரிதுபடுத்திக்கொண்டு, மாற்றுக் கட்சிகளுடன் இணைந்து, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அரசியல் செய்வதை கைவிடுங்கள். அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில், சிறுபான்மை சமூகங்கள் தங்கள் இருப்புக்களை எவ்வாறு தக்கவைக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து செயற்படுங்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், பெரியமடுவில் நேற்று மாலை (10) இடம்பெற்ற கூட்டத்தில், இலக்கம் 2 இல் போட்டியிடும் வேட்பாளர் பகீரதன் உரையாற்றும் போதே, இவ்வாறு கூறினார்.

இந்தக் கூட்டத்தில் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், வேட்பாளர் ரஞ்சன் குரூஸ் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு ஐயா ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

வேட்பாளர் பகீரதன் மேலும் கூறியதாவது,

“நான் ஒரு இந்துச் சகோதரன். மாந்தை மேற்கு, வெள்ளாங்குளத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். எல்லா வலிகளையும் சுமந்த ஒருவன். இதைவிட உங்களுக்கு எதுவுமே சொல்லத் தேவையில்லை. நாங்கள் தலைமைத்துவத்தை இழந்த இனமாக சித்தரிக்கப்படுகின்றோம். ஆனால், உங்களுக்கு கிடைத்த இவ்வாறான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்திருந்தால் தலைமைத்துவத்தை இருத்திவிட்டு, நாங்களே ஊர் ஊராகத் திரிந்து வாக்குக் கேட்போம். தேர்தல் வேலைகள் அனைத்தையும் நாங்களே பார்த்துக்கொள்வோம். எங்களைப் பொறுத்தவரையில், தற்போது எங்களுக்குக் கிடைத்துள்ள இந்தத் தலைமைத்துவத்தை நாங்கள் விடுவதாக இல்லை.

மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் செல்லத்தம்பு ஐயா, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுடன் சுமார் 16 வருடங்களுக்கு மேலாக பயணிக்கின்றார். சக வேட்பாளர் ரஞ்சன், சுமார் 15 வருடங்களாக பயணிக்கின்றார். மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நந்தன் உட்பட பல தமிழ்ச் சகோதரர்கள் தலைமையுடன் தொடர்ந்து பயணிக்கின்றனர். ஆனால், எவரும் இதுவரை தடம்புரளவில்லை. எத்தனை பேரம்பேசல்கள் நடந்தாலும் அவர்கள் ஒருபோதுமே தடம்புரளவும் மாட்டார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில், மக்கள் காங்கிரஸ் தலைமைத்துவத்தைக் காப்பாற்ற, வன்னி முழுவதும் ஊர் ஊராகக் கூட்டம் போட்டு கதைக்கின்றோம்.  நிலைமைகளை விளக்குகின்றோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு  சமத்துவமான  கட்சி. கத்தோலிக்க சமூகத்தினர் ஒருவரை மாந்தை மேற்கில் தவிசாளராக்கி, அழகு பார்த்த கட்சி. இந்துச் சகோதரர் ஒருவரை மாந்தை கிழக்கில் அதிகாரக் கதிரையில் இருத்திய கட்சி. அவ்வாறானால் இந்தக் கட்சியிலிருந்து, தமிழ்ச் சகோதரர் ஒருவர் பாராளுமன்றத்துக்கு ஏன் செல்ல முடியாது?

எனவே, சிறுபான்மைச் சமூகங்கள், அற்பசொற்ப ஆதாயங்களுக்காக வேறு கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்யாமல், அவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம், இன உறவை வலுப்படுத்த முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

 

 

Related Post