Breaking
Fri. Nov 1st, 2024

சிங்கள பெளத்த உரிமைகளை பாதுகாத்து நாட்டை பாதுகாக்க விரும்பி மாற்றத்தினை மக்கள் ஏற்படுத்தியதைப்போல் தமிழ் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை வென்று கொடுப்பதன் மூலமே தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும் என தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமானது மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

கால மாற்றத்திற்கேற்ப இளைஞர்களின் சக்தியினூடாக ஒரே கூரையின் கீழ் இணைவோம் எனும் தொனிப்பொருளில் நேற்று இளைஞர் இயக்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எனது அரசியல் வாழ்க்கையில் போராட்டங்களும் மாற்றத்திற்குமே அதிக நேரம் செலவழித்துள்ளேன். கடந்த காலங்களில் பல தலைவர்களுடன் செயற்பட்டிருக்கின்றேன். அதேபோல் இடைப்பட்ட காலங்களில் யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் கடந்து தற்போது மிகப்பெரிய மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளோம். இந்த மாற்றம் சரியாக அமைய வேண்டுமாயின் தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் சரியாக செயற்பட வேண்டும்.

அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்படுவதனால் மக்கள் திருப்தியடையப்போவதில்லை. மக்களின் பசியை போக்கி அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக்கூடிய வகையில் ஆட்சியில் பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல் இன மத ஒற்றுமையினை பாதுகாத்து ஒன்றிணைந்த ஆட்சியினை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் சிங்கள பெளத்த உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானது. ஆனால் அதற்கு சமமான வகையில் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்களின் உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டிய தேவை உள்ளது. அத்தோடு நாட்டின் அபிவிருத்தி மேம்பட வேண்டும் நல்ல வர்த்தக பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தினை சரியான முறையில் செயற்திறன் மிக்கதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

அத்தோடு கட்சி அரசியல் முறைமையில் இருந்து விடுபட்டு மாறுபட்ட அரசியல் முறைமையொன்றினை உருவாக்க வேண்டும். சின்னம் வர்ணம் கொள்கையென தனித்து பயணித்து நாட்டின் அபிவிருத்தியினை கட்டிக் காக்க முடியாது. எனவே இப்போது அனைவருக்கும் மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை மிகச்சரியாக பயன்படுத்தி மாற்றத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் எந்தவொரு மாற்றத்திற்கும் அடிப்படை இளைஞர்களே. இளைஞர் சமூகம் ஒன்றிணைவதுதான் ஒரு நாட்டின் பிரதான மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும்.

Related Post