-ARA.Fareel-
தம்புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்ளிவாசல் விவகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்தப் போக்கினால் பல வருடகாலம் கடந்தும் தீர்க்கப்படாதுள்ளது.
இப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளார்.
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார விடிவெள்ளிக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டு பலவருடங்கள் கடந்துவிட்டன. பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. பள்ளிவாசலுக்கு உகந்த வசதியான காணியொன்றினை அவர்கள் கோரினார்கள். அதற்கிணங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளையில் காணியொன்றினை இனம் கண்டுள்ளது.
என்றாலும் நகர அபிவிருத்திச்சபை அதிகாரிகள் தமது கடமையில் அசமந்தப் போக்கினையே கடைப்பிடிக்கிறார்கள். பள்ளிவாசலுக்கு அருகாமையில் வாழும் குடும்பங்கள் இடம்பெயர்வதற்கான காணி இனம் காணப்படவில்லை. அப்பகுதிக்கு பாதை மற்றும் குடிநீர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படவில்லை.
அத்தோடு தம்புள்ளை புனித பூமியிலிருந்து அகற்றப்பட்ட கோவிலுக்கான காணியும் இதுவரை இனம் காணப்படவில்லை. இவ்வாறான நிலை தொடர்ந்தும் நீடித்தால் தம்புள்ளை பள்ளியை அகற்றுவதற்கு முன்புபோல் சவால்கள் முன்னெடுக்கப்படலாம். இதனால் அங்கு இனங்களுக்கிடையிலான நல்லுறவு பாதிக்கப்படும்.
தம்புள்ளை ரங்கிரி ரஜமகா விகாரhதிபதி இனாமலுவே தேரர் பள்ளிவாசல் விவகாரத்தை தீர்ப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்.
ஒரு தடவை பாராளுமன்றத்துக்கும் வந்து எம்முடன் கலந்துரையாடினார். இவ்வாறு அனைவரும் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் ஒரே கருத்தினைக் கொண்டிருக்கையில் நகர அபிவிருத்தி அதிகாரசபை தனது கடமையை பிற்போட்டு வருகிறது என்றார்.
பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர் எஸ்.வை.எம். சலீம்தீனைத் தொடர்பு கொண்டு வினவிய போது அவர் பின்வருமாறு விளக்கமளித்தார். நகர அபிவிருத்தி அதிகாரசபை தம்புள்ளையில் தற்போது பள்ளிவாசல் அமைந்திருக்கும் இடத்திலிருந்து சிறிது தூரத்தில் பள்ளிவாசலுக்கென்று காணியொன்றினை இனம் கண்டுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கும் காணி காண்பிக்கப்பட்டது. காணி மதுபானசாலைக்கருகில் அமைந்துள்ளதால் வேறு காணி வழங்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
பல மாத காலமாகியும் நகர அபிவிருத்தி அதிகாரசபை எவ்வித மாற்று ஏற்பாடுகளும் செய்யவில்லை. பள்ளிவாசலுக்கு அருகாமையில் வசிப்பவர்களுக்கு மாற்றுக் காணிகளுக்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை. நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கைகள் மந்த கதியிலே நடைபெறுகின்றன.
இது தொடர்பாக அமைச்சர்களான கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோரை நேரில் சந்தித்து பள்ளிவாசல் நிர்வாக சபை கலந்துரையாடவுள்ளது என்றார்.