தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்றி நகர அபிவிருத்தி அதிகாரசபை தம்புள்ளை நகருக்கு அண்மையில் வழங்கவுள்ள காணியில் புதிதாக நிர்மாணித்துக் கொள்வதற்கு வக்பு சபை பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.
வக்பு சபை அங்கத்தவர்களுக்கும் பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே வக்புசபை இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
‘தம்புள்ளை நகருக்கு அண்மையில் பள்ளிவாசலுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை காணி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதால் வசதியான ஒரு பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ளமுடியும்.
தற்போது பள்ளிவாசல் இருக்கும் இடத்திலே தொடர்ந்தும் பள்ளிவாசல் இருக்குமென்றால் அது எதுவித அபிவிருத்தியுமின்றி தகரத்திலான பள்ளிவாசலாகவே இருக்கும்.
பள்ளிவாசல் நிர்வாகம் புதிய இடத்துக்கு இடம்பெயர தீர்மானித்துள்ளமையை வக்பு சபை வரவேற்கிறது.’ என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாஸீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டுள்ள காணிக்கு அருகாமையில் தற்போது பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் குடும்பங்களுக்கும் காணி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது நல்லவோர் ஏற்பாடாகும். பள்ளிவாசல் நிர்வாகம் புதிய இடத்துக்கு இடமாறிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளமை தம்புள்ளையில் இன நல்லிணக்கத்துக்கான முன்னுதாரணமாகும்.
2012 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளிவாசல் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இப்பகுதியிலுள்ள பௌத்ததேரர் பள்ளிவாசலை பலவந்தமாக அகற்ற மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை.
முஸ்லிம்கள் பாதை அபிவிருத்திக்கும் நகர அபிவிருத்திக்கும் நீர்விநியோகத்திட்டத்திற்கும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியுள்ளது.
இதற்கு சிறந்த தீர்வு பள்ளிவாசலை தற்போது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிக்கொள்வது தான் ஒரே வழி.
நகருக்கு அண்மையில் புதிதாக பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ள அரசாங்கமும் உதவி செய்யுமென நம்புகிறேன் என்றார்.