-நன்றி விடிவெள்ளி
தம்புள்ளை பள்ளிவாசல் சட்டரீதியானதாகும். பள்ளிவாசலை வேறோர் இடத்தில் இடமாற்றிக் கொள்ளத் தேவையான காணியைப் பெற்றுக் கொள்வது எமது உரிமையாகும்.
வக்பு சொத்துகளைப் பரிபாலிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல் நிர்வாகிகள் மௌனம் காக்காது சட்டரீதியாக போராட வேண்டும். இது விடயத்தில் வக்பு சபை தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரிவித்தார்.
தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்;
‘தற்போது தம்புள்ளை பள்ளிவாசலும் ஏனைய கட்டடங்களும் 41.49 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ளன. அத்தோடு தம்புள்ளை நகரிலே பள்ளிவாசல் அமைந்துள்ளது. நகருக்கு வெளியே பள்ளிவாசலுக்கு காணி ஒதுக்கப்பட்டுள்ளதால் அதன் பெறுமதிக்கு அமைவாக சுமார் 80 பேர்ச்சஸ் அளவில் ஒதுக்கப்பட வேண்டும்.
இதற்காக பள்ளிவாசல் நிர்வாகம் நகர அபிவிருத்தி அதிகாரசபை, அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோரைச் சந்தித்து அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகம் அழுத்தங்களைப் பிரயோகிக்காது விட்டால் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
பள்ளிவாசலுக்கு எதிராக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டாலும் நாம் எமது சட்டரீதியான உரிமைகளைக் கேட்க வேண்டும். அப்போதே அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமையும்.
1950 களிலிருந்து இயங்கி வரும் ஒரு பள்ளிவாசலை எவராலும் மறுக்க முடியாது. எனவே பள்ளிவாசல் நிர்வாகம் இதுவிடயத்தில் விட்டுக் கொடுப்புகளைச் செய்யக்கூடாது என்றார்.
இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம். சலீம்தீனைத் தொடர்பு கொண்டு வினவியபோது, தம்புள்ளை பள்ளிவாசலை இடமாற்றிக் கொள்வதற்கு 80 பேர்ச் காணி வழங்கப்படுவதுடன் அக்காணிக்கு அண்மையில் தற்போது பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் 28 தமிழ், முஸ்லிம், சிங்கள குடும்பங்களுக்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்கப்பட்டாலே நாம் இவ்விடத்திலிருந்து நகருவோம். இல்லையேல் எமது உரிமைகளுக்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.