தம்புள்ள ஜும்மா பள்ளியை நிர்மாணிக்கும் காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபை தயக்கம் காட்டிவருவதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.இப்றாஹிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
தம்புள்ள பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தம்புள்ள தொகுதி அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான ப்ரியான் விஜேரத்ன தலைமையில் நடைபெற்ற போது தம்புள்ள நகரில் முஸ்லிம் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்மாணிப்பதற்கென இனங்காணப்பட்டுள்ள காணியை விடுவிப்பதில் நகர அபிவிருத்தி அதிகார சபையினர் தொடர்ந்தும் காலதாமதம் செய்து வருவது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.இப்றாஹிம் கேள்வி எழுப்பினார்.
அண்மையில் மாத்தளைக்கு வருகை தந்திருந்த மேல் மாகாண மற்றும் நகர அபிருத்தித் துறை அமைச்சர், பாட்டாலி சம்பிக்க ரணவக்கவைத் தாம் நேரில் சந்தித்து, தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாசலுக்கென இனங்காணப்பட்டுள்ள காணியை தாமதமின்றி விடுத்துத் தருமாறு வேண்டிக் கொண்டதாகவும், காணியை விடுவித்துத் தருவதில் எவ்வித சிக்கல்களும் இல்லையென அமைச்சர் அதன் போது தெரிவித்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கு பதிலளித்த மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான ரஞ்சித் அலுவிகார உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அத்துடன், தம்புள்ள நகரில் முஸ்லிம் பள்ளிவாசலொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் தாம் தம்புள்ள ரஜமஹ விகாரையின் அதிபர் சுமங்கல தேரருடன் கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கும் நிலையில், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்குச் சமீபமாக இனங்காணப்பட்டுள்ள காணியைக் காலதாமதமின்றி விடுவிப்பதற்கு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறும், நகர அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்றார். (விடிவெள்ளி)