உடுவே தம்மாலோக தேரர் அனுமதிப் பத்திரம் இன்றி யானைக் குட்டியொன்றை தன்னகத்தே வைத்திருந்தமை தொடர்பிலான, விசாரணை நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.
இன்று குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறு கூறியுள்ளனர்.
மேலும், விசாரணை குறித்த அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட அவர்கள், சட்ட மா அதிபரின் அறிவுரை கிடைக்கப்பெற்றதும், உரிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, தம்மாலோக தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, விசாரணைகள் முடிவுற்றிருப்பின், நோட்டீஸ் வரும் பட்சத்தில் மாத்திரம் தேரரை நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
எதுஎவ்வாறு இருப்பினும் இந்தக் கோரிக்கையை கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் நிராகரித்துள்ளார்.
அத்துடன் இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் 9ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.