தருமபுரியில் குழந்தைகள் இயற்கை இடற்பாடுக் காரணமாகவே உயிரிழந்து உள்ளன என்று, தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்று தகவல் வெளியானது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அரசு மருத்துவமனையில் போதிய செவிலியர்கள் இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதற்கிடையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதாகத் தெரிய வருகிறது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பாஸ்கர், அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை, செவிலியர்கள் பற்றாக்குறை என்று எதுவுமில்லை என்று கூறியுள்ளார்.
மேலும்,குழந்தைகள் இறப்பு என்பது குறைப்பிரசவம், எடை குறைவு, சுவாசக் கோளாறு போன்ற பிரச்சனைகளால் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதுக்குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அமைச்சர் கூறியதே வெளிவந்துள்ளது. அதோடு இன்று அனைத்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், மருத்துவத்துறை இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி தலைமையில் ஒரு குழுவை நியமித்து கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதோடு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தருமபுரியில் சாதாரணமாகவே வருடத்திற்கு 2 ஆயிரத்து 50 குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 39 குழந்தைகள் இறக்கின்றன என்றும், ஆனால் இந்த முறை இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.