சீனாவில் இருந்து நாடு கடத்தப் பட்ட திபேத் புத்த மத ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா மீது ஆதரவாக செயற்படுபவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப் படும் என சீன அரச அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக பீஜிங் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக தலாய் லாமாவுக்கு விசுவாசமாக உள்ள சீன கம்யூனிசக் கட்சியின் உறுப்பினர்கள் தண்டிக்க படுவர் என புதன்கிழமை மூத்த அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் உட்துறை கண்காணிப்பகத்தின் தலைவர் யே டொங்சொங் ஆங்கில மொழியிலான கம்யூனிசக் கட்சியின் செய்திப் பத்திரிகையான குளோபல் டைம்ஸுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தீபேத் அதிகாரிகள் பிரிவினை வாதிகளை இல்லாது ஒழிக்கவும் சமூக ஸ்திரத் தன்மையை கொண்டு நடத்தவும் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மறுபுறம் The People’s Daily என்ற இன்னொரு உள்நாட்டுப் பத்திரிகையில் திபேத் கட்சித் தலைவர் சென் குவாங்குவோ புதன்கிழமை 14 ஆவது தலாய் லாமாவினைப் பின்பற்றுபவர்களை கடுமையாக எச்சரித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சீன எதிர்ப்பு வலுத்ததால் 1950 ஆம் ஆண்டு 14 ஆவது தலாய் லாமா திபேத்தில் இருந்து இந்தியாவுக்குத் தஞ்சம் புகுந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமாதானத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ள தலாய் லாமா பீஜிங் அரசால் தீவிரவாதியாக நோக்கப் படுகின்றார். 2009 ஆம் ஆண்டில் சீன அரசுக்கும் அதன் மதக் கொள்கைக்கும் எதிரான ஆர்ப்பாட்டப் பேரணிகளின் போது சுமார் 130 திபேத் துறவிகள் தீக் குளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.