Breaking
Sun. Dec 22nd, 2024

-சுஐப் எம்.காசிம்-

முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம் முடிவு கட்ட முன்வாருங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாரை மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் அம்பாரை மொண்டி ஹோட்டலில் இன்று (01) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல் காலங்களில் தலைகளை எண்ணி, இத்தனை வாக்குப் பலம் எங்கள் கட்சிக்கு இருக்கிறது என்ற மாயையை ஏற்படுத்தி, எவ்வளவு தொகை எங்களுக்கு தரமுடியும்? என்ற கேவலமான அரசியலை நடாத்திக்கொண்டிருப்பவர்களுக்கு சாவு மணி அடிக்க வேண்டிய தேவைப்பாடு தற்போது எழுந்துள்ளது.

எமக்கு முன்னே வந்திருக்கும் ஆபத்துக்களை எதிர்நோக்குவதற்கு இந்தத் தேர்தல் நமக்கு பலம் சேர்க்க வேண்டும். நமது சமுதாயம் இந்த சந்தர்ப்பத்தில் சரியான முடிவை எடுக்கவில்லையென்றால், எதிர்காலம் சூனியமயமாகி விடும். அரசியலமைப்பு மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கவுள்ள பாரிய ஆபத்துக்களை தடுப்பதற்கு, இந்தத் தேர்தலில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாக்குப் பலமே அடித்தளமாய் அமையப் போகின்றது.

 

வடக்கு, கிழக்கு இணைப்பா? அல்லது பிரிவா? பாராளுமன்றத் தேர்தல் முறையில் முஸ்லிம் சமூகத்துக்கும், மலையகத்தவர்களுக்கும் இழைக்கப்படவிருக்கும் அநீதிகளைத் தொடர இடமளிப்பதா? இல்லையா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்தத் தேர்தல் பாடம் புகட்டப் போகின்றது.

முழு முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டம், கிழக்கு மாகாண மக்களின் முழுமையான ஒற்றுமையிலும், ஐக்கியத்திலுமே பெரிதும் தங்கியுள்ளது. பாடல்களுக்கும், வீராவேசப் பேச்சுக்களுக்கும், வெற்றுக் கோஷங்களுக்கும் நாம் ஏமாந்தோமேயானால், நமது எதிர்கால சமூகத்துக்கு நாம் பதில் சொல்ல வேண்டி நேரிடும்.

மர்ஹூம் அஷ்ரபின் மறைவின் பின்னர், தலைமைப் பதவியை தனது நப்ஸ் கேட்கின்றது. அதனைத் தாருங்கள் என தற்போதைய தலைவர் கேட்ட போது, அந்தக் கட்சியில் உள்ளவர்கள் அதனை அவருக்கு வழங்கினர். அதன் பின்னர் சுமார் பதினேழு வருடங்களாக நமது சமூகம் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. பேரம் பேசும் சக்தியாகவும், ஆட்சியை மாற்றும் சக்தியாகவும், அதனைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்த நமது சமூகம், அதனை இழந்து தவிக்கின்றது. பிரேமதாசவையும், சந்திரிக்காவையும் ஜனாதிபதிகளாக்கி, ஆட்சியில் பேரம் பேசும் சக்தியையும் கொண்டிருந்த எமது பலம் தற்போது தவிடுபொடியாக்கப்பட்டுவிட்டது.

எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியும், எவரும் ஜனதிபதியாக வர முடியும் என்ற பெருமையை பெற்றதுதான், இந்தக் கட்சி இதுவரையில் நிலைநாட்டிய சாதனை.

சமூகப் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடுவோம் என நாம் எத்தனையோ தடவை இதய சுத்தியோடு அழைப்பு விடுத்திருக்கின்றோம். முயற்சித்திருக்கின்றோம். பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். எனினும், அவ்வாறான முயற்சிக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஆதரவளிக்கவுமில்லை, உடன்படவுமில்லை. சமுதாயத்துக்காக ஒன்றுபட்டுச் செயற்படுமாறு நாம் விடுத்த அழைப்பு நிராகரிக்கப்படுவதாக இருந்தால், அந்தத் தலைமையின் உள்நோக்கம்தான் என்ன? தான் மட்டுமே தானைத் தளபதியாக இருந்து மொத்த வியாபாரத்தை தனித்து நின்று செய்ய வேண்டும் என்பதா?

சமுதாயத்தின் எதிர்காலம் பறிபோகின்றது – நமக்கு முன்னே கிடக்கும் ஆபத்துக்களை தடுக்க வேண்டும். இவ்வாறான விடயங்களுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டுமென்ற தூய எண்ணத்தில், ஏதாவது முயற்சி எடுத்தால், எம்மைக் காட்டிக்கொடுத்து தங்களின் அரசியல் இருப்பை பாதுகாப்பதிலேயே அவர்கள் குறியாகச் செயற்படுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸின் ஆணிவேர் எனக் கூறப்பட்ட ஹசன் அலியை கட்சியில் இருந்து தூக்கி எறிந்ததன் நோக்கம்தான் என்ன? பதினேழு வருடமாக பலரின் ஏச்சுக்களையும், பேச்சுக்களையும், திட்டுக்களையும் தாங்கிக்கொண்டு அமைதியாக இருந்து, தலைமைத்துவத்தை அவர் பாதுகாத்தமைக்கு கிடைத்த பரிசுதானா இது? தனக்கு “ஆமாம் சாமி போடுபவர்கள்தான்” செயலாளரின் இடத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென அந்தத் தலைமை சிந்திக்கின்றது என்றால், அதன் நோக்கம் வித்தியாசமானதே.

எங்களைப் பொறுத்தவரையில் கட்சியையோ, தலைமைத்துவத்தையோ ஒரு பெரிதாக பொருட்படுத்தவில்லை. சமூகத்தின் உரிமை காத்து, தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதற்காக நாம் ஹசன் அலி தலைமையில், இந்த புதிய கூட்டமைப்பை உருவாக்கினோம். இந்தக் கூட்டுக்குள் அதாவுல்லாஹ்வையும், நாம் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், சிலருக்கு அந்த சந்தர்ப்பத்தை இறைவன் நாடவில்லை.

இரத்த உறவை விட, குடும்ப உறவை விட, நட்பை விட கட்சியையே தமது உயிர் மூச்சு என வாழ்ந்த பலர், அண்மைக் காலங்களில் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி எமது பயணத்தில் கைகோர்த்துள்ளனர். சமுதாயத்தை பாதுகாக்க வேண்டுமென்ற தூய நோக்கத்தில் வந்திருக்கும் இவர்கள் மீது, மோசமான அபாண்டங்களையும் பழிகளையும் சுமத்தி வருகின்றனர்.

கூலிக்கு ஆட்களை அமர்த்தி அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். சமூகத்தின்பால் கொண்ட அன்பினால், தமது பேனாக்கள் மூலம் நேர்மையான கருத்துக்களையும், உண்மைகளையும் கூறும் ஊடகவியலாளர்கள் மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்தும் பரிதாபங்கண்டு நாம் வேதனை அடைகின்றோம் என்று அமைச்சர் ரிஷாட் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹசன் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான ஏ.எம்.ஜெமீல், எஸ்.எம்.எம்.இஸ்மாயில் (வி.சி), அப்துல் மஜீத் (எஸ்.எஸ்.பி), ஏ.ஆர்.எம்.ஜிப்ரி. தலைமை வேட்பாளர்களான ஏ.எம்.எம்.நௌஷாட், எம்.ஏ.அன்சில், தாஹிர் உட்பட தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் மௌலவி ஹனீபா மதனி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமீர், முன்னாள் நீதியரசர்களான ஜெமீல், கபூர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

 

 

 

 

Related Post