இலங்கையின் தலைமன்னாரையும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரை வழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் தரைவழி இணைப்புப் பாலத்தை அமைப்பது தொடர்பாக தலைமன்னார் முன்மொழியப்பட்டுள்ள திட்டம் குறித்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார வல்லுநர்களுடன் கலந்துரையாடியதாக இந்தியப் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியாவுக்கு தனது முதல் அதிகாரபூர்வப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், வரும் 15ஆம் திகதி நடத்தவுள்ள பேச்சுக்களின்போதும், இந்த தரைவழிப்பாதைத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டம் தொடர்பாக இதுவரை இந்தியா அதிகாரபூர்வத் தகவல் எதையும் வழங்கவில்லை என்று முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.