தலைமன்னார் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை அமைச்சரும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான டெனீஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினருமான ஸ்டாயு அவர்களுடனும் இன்று தலைமன்னார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், மேற்படி வைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணிப்பற்றாக் குறை சம்பந்தமான விடையங்களினை கேட்டறிந்துகொண்டார்
நீண்டகாலமாக நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியரினால் எடுத்துக் கூறப்பட்டதுடன் அதற்கான தீர்வினை உடனுக்குடன் பெற்றுத்தருமாறும் வைத்தியசாலை அதிகாரிகளினால் வருகை தந்த அரசியல்வாதிகளிடம் வினயமாக வேண்டிக் கொள்ளப்பட்டது. அதற்கு பதிலளித்த தவிசாளர், டெனீஸ்வரன் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் அதற்கான தீர்வினை வெகுசீக்கிரம் பெற்றுத்தருவதாக வைத்தியசாலை நிர்வாகிகளுக்கு வாக்குறுதியளித்துள்ளனர்.
இவ்வைத்தியசாலையின் குறைபாடுகளினை இதற்கு முன்பும் நேரடி விஜயம் செய்து கேட்டறிந்து கொண்ட மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்கள் அதற்கான தீர்வினை எவ்வாறாவது பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்குடனயே இம்முறை வடமாகாண சபை உறுப்பினர்களையும் தன்னுடன் அழைத்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் வைத்தியசாலையின் நிர்வாகிகள் மற்றும் அப்பிரதேசத்தின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.