Breaking
Thu. Nov 21st, 2024

பலஸ்தீன மக்களின் தலைமைகளை அழித்து, காஸாவை அடக்கியாளும் ஸியோனிஸவாதிகளின் வெறியாட்டம் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவராதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவரான யஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமையைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஓராண்டு ஓடியும் காஸா மக்களின் மன வலிமைகள் உறுதியுடனே உள்ளன. அதிபயங்கரக் குண்டுகளை வீசி, அப்பாவிச் சிவிலியன்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது. மனு தர்மங்களை மீறி, இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை சர்வதேசம் தடுத்து நிறுத்தவும் இல்லை. இருந்தபோதும், போரின் கொடுமைகளால் காஸா மக்கள் துவண்டுபோகவும் இல்லை. இம்மக்களுக்கு வழங்கப்படும் தலைமைத்துவமே இதற்குக் காரணமாகும். இதற்காகவே, தலைமைகளை அழிப்பதென்று வரிந்துகட்டி நிற்கிறது இஸ்ரேல்.

இலத்திரனியல் தொழில்நுட்ப உதவியுடன் இஸ்மாயில் ஹானியா கொல்லப்பட்ட கொடூரத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சத்தின் உச்சியிலும் ஆபத்தின் விளிம்பிலும் இருப்பதை உணர்ந்தும் ஹமாஸுக்கு தலைமை வழங்குவதற்கு யஹ்யா சின்வார் முன்வந்தார். பாரமேற்றுப் பணியாற்ற முன்னரேயே இவரையும் இஸ்ரேல் குறிவைத்துக் கொன்றுள்ளது. காஸா தலைமைத்துவத்தில், இஸ்ரேலுக்குள்ள படபடப்பையே இது காட்டுகிறது.

என்னவானாலும் காஸா மக்களுக்கு விடிவு கிடைப்பதை இறைவனைத் தவிர எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இந்த நம்பிக்கையுடன்தான் காஸாக் குழந்தைகளும் பிறக்கின்றன.

இழப்புக்களில் எழும் தேசமாக வெகு விரைவில் காஸா தலையெடுக்கும். இதற்கான தலைமைகளே அம்மண்ணில் பிறப்பதாகவும்” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related Post