Breaking
Thu. Dec 26th, 2024

– எம்.சி.அன்சார் –

பெருந்தலைவர் எம்.எச்எம். அஷ்ஃரப் அவர்கள் கண்ட கனவை நனவாக்கும் நோக்கிய பயணத்தில் எதிர்காலங்களில் எவ்வாறான சவால்கள், சதிகள், தடைகள் வந்தாலும் அச்சமில்லாமல் முன்னோக்கி பயணிக்க அகில இலங்கை மக்கள் கட்சியும். அதன் தலைமையும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பின்நிற்கப் போவதில்லை.

என அகில இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் கட்சிக்கு வாக்களித்த சம்மாந்துறை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று சனிக்கிழமை(12) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திலே மேலும் தெரிவிக்கையிலே- அம்பாறை மாவட்டத்தில் கன்னி முயற்சியாக கால்பதித்து தனித்து நின்று ஒரே மாதத்திற்குள் 33 ஆயிரத்து வாக்குகளைப் பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனது வெற்றியின் முதலாவது மைக்கல்லை எட்டியுள்ளதுடன், எமது கட்சியினையும், தலைமைத்துவத்தினை அங்கரித்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களின் உரிமைக்காக உருவாக்கப்பட்ட தலைமைத்துவம், மறைந்த பெருந்தலைவர் அஷ்ரபிற்குப் பின்னர் வலுவிழந்து, உரிமைப் போராட்டங்களில் தயக்கத்தோடு பின்வாங்கிய துர்ப்பாக்கிய நிலையின் காரணமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உதயம் காலத்தின் தேவையாக அமைந்து விட்டது. இத்தேர்தலில் நீங்கள் அளித்த வாக்குகள் எமது கட்சியின் எதிர்கால வெற்றிக்கு கட்டியம் கூறுவதோடு நல்லதொரு வெள்ளோட்டமாகவும் அமைந்து விட்டது

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும், தீர்வுத்திட்டங்கள் வருகின்றபோதும் அதனை தர மறுக்கின்ற பொழுதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோர்களின் தேசிய அரசாங்கத்தின் மூலம் பேசிப் பெற்றுக் கொள்ள அகில இலங்கை மக்கள் கட்சியும் அதன் தலைமையும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளது.

பெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பணம் கொடுத்தோ அல்லது சலுகைகளை வழங்கியோ வளர்க்கவுமில்லை, அரசியலும் செய்யவில்லை. உளத்துாய்மையோடும், இறைவனுக்கு அச்சியும் அரசியல் செய்தார். ஆனால் தற்போதைய தலைமை அவரி்ன் சிந்தனைக்கு மாறாக தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

அன்று ஆட்சியினை தீர்மாணிக்கின்ற சக்தியாக முஸ்லிம் சமூகத்தினை பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக மாற்றியமைத்தார். ஆனால் இன்று கவனிப்பார் இல்லாத சமூகமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலிருந்து இந்தச் சமூகத்தினுடைய கௌரவத்தினை பெற்றுக்கொடுக்கும் பாரிய பொறுப்பினை அகில இலங்கை மக்கள் கட்சியின் தலைமை முன்னெடுக்கவுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலிலே வன்னி மற்றும் திருகோணமலையில் 1989ஆம் ஆண்டிலிருந்து பாதுகாத்துவந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை முஸ்லிம் காங்கிரஸ் இன்று இழந்து நிற்கின்றது. மட்டக்களப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியோடு கூட்டுச்சேர்ந்ததால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அகில இலங்கை மக்கள் கட்சி புத்தளம், குருணாகல் மாவட்டங்களில் சொற்பவாக்குகளினால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்துள்ளோம். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச வாததத்தினை துாண்டியும், சதிமுயற்சியினாலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது.

அம்பாறை மாவட்ட மக்கள் எனது கட்சிக்கு தந்த அங்கீகாரத்தினை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். இம்மாவட்டத்திலுள்ள கிராமங்களை எமது கட்சிக்கு கிடைந்துள்ள இரண்டு அமைச்சுக்கள் மூலம் அபிவிருத்தி செய்யதுள்ளதுடன், கைத்தொழில் போட்டை ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் இரண்டாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவுள்ளேன். என்றார்.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எம். அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். இஷ்ஹாக், அப்துல்லாஹ் மஹ்ருப், எம்.எச்.எம்.நவவி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், எம்.எல்.ஏ. அமீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

rr.jpg3_.jpg4_

Related Post